டேட்டா இல்லாமல், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் ரீசார்ஜ் - TRAI உத்தரவு
trai order to call sms only recharge packs without data: டேட்டா இல்லாமல், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் தனி ரீசார்ஜ் திட்டங்களை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அறிவிக்க வேண்டுமென TRAI உத்தரவிட்டுள்ளது.
அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் ரீசார்ஜ்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போனுக்கு மாறிவிட்டாலும், இன்னும் 20 கோடிக்கு அதிகமான மக்கள் Features Phone என அழைக்கப்படும் பொத்தான் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குரல் அழைப்பு(Call) மற்றும் எஸ்எம்எஸ்(SMS)களுக்கு தனியாக வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் படிப்படியாக குறைத்துவிட்டன.
தற்போது பயனர்கள், தங்களுக்கு இணைய டேட்டா தேவையில்லை என்றாலும் கூட, டேட்டா உடன் கூடிய பேக்களை அதற்கான கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் டேட்டா இல்லாமல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களுக்கான தனி ரீசார்ஜ் திட்டங்களை அமுல்படுத்துமாறு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI), தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
டேட்டாவுடன் வழங்கப்படும் அதே செல்லுபடியாகும் கால அளவிற்கு இணையாக, 30 நாட்களுக்குட்பட்ட குறுகிய கால அளவிலும் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் ரீசார்ஜ் திட்டத்தை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் அல்லது மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்து கொள்ளும் வகையில் குறைந்தபட்சம் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை வழங்க வேண்டும்.
நீண்ட கால டேட்டா பேக்குகளுக்கு இணையாக, நீண்ட கால செல்லுபடியாகும் குரல் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் திட்டங்களையும் குறைந்தபட்சம் ஒன்றாவது வழங்க வேண்டும்.
இந்த குரல் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் திட்டங்களில் டேட்டா இல்லாத காரணத்தால், டேட்டா உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை விட இது குறைந்த விலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.