அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கி.மீ தூரம் சென்ற ரயில்.., கர்ப்பிணி மரணத்தில் திடுக்கிடும் தகவல்
கர்ப்பிணி மரணத்திற்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கர்ப்பிணி மரணம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், சென்னையில் உள்ள பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், மேலநீழிதநல்லூருக்கு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், அங்கேயே அடுத்த நாள் வளைகாப்பு நடத்துவதற்காகவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, கொல்லம் ரயிலில் சென்ற போது இரவு 8 மணிக்கு வாந்திக்கான அறிகுறி கஸ்தூரிக்கு ஏற்பட்டதால் கை கழுவும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர், உறவினர்கள் ரயிலில் இருந்து இறங்கி, கர்ப்பிணி விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர்.
ஆனால், கர்ப்பிணி அங்கு இல்லை. இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக வந்தது.
இதையடுத்து, பொலிஸார் கர்ப்பிணியை தேட ஆரம்பித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்துள்ளார்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இதில் கஸ்தூரி ரயிலில் இருந்து கீழே விழுந்தவுடன் அந்த பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை உறவினர்கள் பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால், அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன்பிறகே ரயில் நின்றுள்ளது. இதற்குள், கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் சென்று விட்டது.
உடனடியாக ரயில் நின்றிருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும், ரயிலானது கொல்லம் சென்றுவிட்டதால் பெட்டிகளில் அபாய சங்கிலிகள் வேலை செய்கிறதா என்று பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |