பல கோடிகளை பிரபல நாடு கொட்டியும் நடக்காத ஒரு காரியத்தை எளிதாக செய்யும் காக்கைகள்! ஆச்சரிய வீடியோ
ஸ்வீடனில் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த காக்கைகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும் நிலையில் அது தொடர்பிலான ஆச்சரிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதன்படி, கீப் ஸ்வீடன் டைடி என்னும் அறக்கட்டளை செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிகரெட் துண்டுகளை எடுக்க காகங்களை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் சோடர்டால்ஜி சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். இந்நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சிகரெட்டுகளை புகைத்து அங்குள்ள பகுதிகளிலேயே வீசி விடுகின்றனர்.
இதனால் சோடர்டால்ஜி நகரமே சிகரெட் குப்பைகள் நிரம்பி அலங்கோலமாக காட்சியளித்தது. சிகரெட் குப்பைகளை அகற்ற சோடர்டால்ஜி நகர நிர்வாகம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வந்தது.
இந்த சூழலில் தான் செலவை குறைத்து சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த நகர நிர்வாகம் கீப் ஸ்வீடன் டைடி அறக்கட்டளை அமைப்புடன் சேர்ந்து வித்தியாசமான ஒரு முறையை கையாண்டுள்ளது.
அதன்படி அந்நகரில் சுற்றித்திரியும் காக்கைகள் சிகரெட் துண்டுகளை எடுத்து வந்தால் அதற்கு உணவுப் பண்டங்களை வழங்கி பயிற்சி அளித்தனர் நகர நிர்வாகத்தினர்.
ஆச்சரியப்படுத்தும் விதமாக, அடுத்த சில நாட்களிலேயே அங்குள்ள காக்கைகள் சிகரெட் குப்பைகளை எடுத்து வந்து நகர நிர்வாகத்தினரிடம் வழங்கி உணவைப் பெறத் தொடங்கின.
இவ்வாறு காக்கைகளை பயன்படுத்தியே சிகரெட் குப்பைகள் இல்லாத நகரமாக சோடர்டால்ஜி தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இதை மற்ற நாடுகளும் பின்பற்றலாமா என யோசித்து வருகிறது.
இது குறித்து அறக்கட்டளையின் நிறுவனர் ஹன்சீன் கூறுகையில், இதுவரையில் நகரின் தெருக்களை சுத்தம் செய்ய 20 மில்லியன் Swedish krona (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 44 கோடிகள்) செலவாகியுள்ளது.
ஆனால் இப்போது காகங்களை பயன்படுத்த தொடங்கியிருப்பதால் செலவானது 75 சதவீதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.