ரயில்கள், விமானங்கள் ரத்து... பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தங்கள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயத்தின் பின்னணி
ரயில்கள், விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடல் என இன்று பிரான்ஸ் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
காரணம் என்ன?
அதாவது, பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார்.
கண்டிப்பாக, குறைந்தபட்சம் 43 வயதுவரை வேலை செய்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு முன்வைத்துள்ள திட்டம் கூறுகிறது.
ஆனால், அரசின் திட்டத்தை பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும், போராட்டங்களில் இறங்கவும் பணியாளர்கள் முடிவு செய்துள்ளதே பிரான்சில் காணப்படும் பரபரப்பிற்குக் காரணம்.
இது ஆரம்பம்தான்
இன்று வேலை நிறுத்தம் துவங்கியுள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம்தான் என்கின்றன தொழிலாளர் யூனியன்கள். இன்னும் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் தொடர இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.
வேலை நிறுத்தம் காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. சில ரயில்கள் மட்டுமே இயங்க உள்ளன.
பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், இரயில்வே மற்றும் பொலிஸ் யூனியன்கள், சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் என பல துறையினரும் வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட உள்ளதால், வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு சுமார் 10,000 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.