துரோகிகள்... தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதன்முறையாக முக்கிய அதிகாரிகள் இருவரின் பதவிகளை பறித்துள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று மூத்த அதிகாரிகள் இருவரை துரோகிகள் என்று குற்றம் சாட்டி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
மட்டுமின்றி, சுய ஆதாயத்திற்காக நாட்டை விட்டுக்கொடுக்கும் எவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், உக்ரேனிய அதிகாரிகளிடையே நாடு தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி வந்த இரு மூத்த அதிகாரிகளையே ஜனாதிபதி ஜெலென்ஸ்கி துரோகிகள் என குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கட்டான சூழலில் இருவரும் நாட்டைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தெற்கிலும் டான்பாஸ் பிராந்தியத்திலும் நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், ரஷ்யா துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் அருகே ரஷ்யா மீண்டும் படைகளை குவித்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மூத்த அதிகாரிகள் இருவரின் பதவிகளை பறித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, துரோகிகள் அனைவரையும் சமாளிக்க நேரம் இல்லை எனவும், ஆனால் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பதவி பறிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் இருவரும் உக்ரைனைப் பாதுகாப்பதற்காக தங்கள் சத்தியத்தை மீறி, நாட்டைக் காட்டிக் கொடுத்தனர் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.