மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவன்! பழங்குடியின நபருக்கு நேர்ந்த அவலம்
இந்தியாவில் ஒடிசா பழங்குடியின நபருக்கு தனது மனைவியின் சடலத்தை ஆந்திராவிலிருந்து தோளிலேயே தூக்கிச் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒடிசா பழங்குடியினர்
ஒடிசா மாநிலம் கோராபுட்டைச் சேர்ந்த எடே சாமுலு என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி ஈடே குருவை ஆந்திராவில் விசாகப்பட்டினம் சங்கிவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் ஈடே குருவுக்கு அளிக்கப்பட சிகிச்சையை அவரது உடல் ஏற்காததால், அவரை ஒடிசாவில் உள்ள சோராடா என்ற கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.
IANS
நடுவழியில் இறந்துவிட்டார்
மருத்துவமனையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமத்திற்குத் செல்ல, சாமுலு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்தார், ஆனால் அவரது மனைவி விஜயநகரம் அருகே நடுவழியில் இறந்துவிட்டார்.
இதையடுத்து, சடலத்தை ஏறிச்செல்ல ஆட்டோ டிரைவர் மறுத்ததால், சாமுலு தனது மனைவியின் உடலை தன் தோளில் சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மற்றொரு வாகனத்தை ஏற்பாடு செய்ய அவரிடம் பணம் இல்லாததால், மனைவியின் உடலுடன் நெடுஞ்சாலையில் நடக்கத் தொடங்கினார்.
இதனைப் பார்த்துவிட்டு ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் அவரைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அவருக்கு உதவ பணம் திரட்டினர்.
இதையடுத்து ஆந்திர மாநில பொலிஸார் அவர்களை மீட்டு உதவியுள்ளனர்.