பற்றியெரியும் தென்னாபிரிக்கா... உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: ஜனாதிபதி முக்கிய ஆலோசனை
தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதியை சிறையில் அடைத்ததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னாபிரிக்காவின் முக்கிய மாகாணங்களில் பரவியுள்ள இந்த வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர 25,000 ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களால் 72 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 800 கடைகள் வரை சூறையாடப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 1,200 பேர் இதுவரை கைதாகியுள்ளனர். மேலும், கடைகள், உணவு கிடங்குகள் என மொத்தமும் சூறையாடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி Cyril Ramaphosa தெரிவித்துள்ளார்.
குறிப்பாக Johannesburg மற்றும் KwaZulu-Natal மாகாணங்கள் வன்முறையாளர்களால் முழுமையாக சூறையாடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, 1994 காலகட்டத்திற்கு பிறகு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் பொலிசாருக்கு உதவியாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 25,000 ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜனாதிபதி Cyril Ramaphosa முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், சுமூக முடிவை உடனே அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.