110 ஆண்டுகள் சிறைத்தண்டனை... அமெரிக்க மாகாணம் ஒன்றை புறக்கணித்த லொறி சாரதிகள்
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லொறி சாரதிக்கு ஆதரவாக சக சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொலராடோ மாகாண எல்லையில் கனரக லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பலியான விவகாரத்தில் சாரதிக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சாலை விபத்தில் 2 டசின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், சம்பவப்பகுதியில் வாகனம் ஒன்று நெருப்பு கோளமாக மாறியது.
இந்த நிலையில், 26 வயதான சாரதிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனரக லொறி சாரதிகள் கொலராடோ மாகாணத்தில் நுழைவதில்லை என போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சாரதிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையானது கடுமையானது எனவும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, இளம் வயது சாரதி என்பதால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் பொதுமக்களிடம் இருந்து நான்கு மில்லியன் கையெழுத்தும் பெற்றுள்ளனர்.
டெக்சாஸ் பகுதியை சேர்ந்த 26 வயது சாரதி Aguilera-Mederos என்பவருக்கு டிசம்பர் 13ம் திகதி 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த சாரதிக்கு எதிராக சுமத்தப்பட்ட 27 குற்றவியல் பிரிவுகளிலும் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொலராடோ ஆளுநரிடம் பொதுமன்னிப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.