சிரியாவில் கனேடிய பெண் தீவிரவாதிகளுக்காக பெருந்தொகை செலவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
சிரியாவிலிருந்து ஐ.எஸ் பெண் தீவிரவாதிகளை அழைத்து வருவதற்காக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறைந்தது 170,000 டொலர் தொகையை செலவிட்டதாக அரசாங்க ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில்
ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியா சென்ற கனேடியர்களில் 8 பெண்களை திரும்ப அழைத்து வரவே ட்ரூடோ அரசாங்கம் சுமார் 170,000 டொலர் தொகையை செலவிட்டுள்ளது.
அத்துடன் இரவு ஒன்றிற்கு 300 டொலர் கட்டணம் வசூலிக்கும் உயர் ரக ஹொட்டல் ஒன்றிலும் அந்த 8 பெண்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்புடைய பெண்கள் ஐ.எஸ் அமைப்பில் இணையும் பொருட்டே சிரியா சென்றுள்ளனர்.
ஆனால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவர்கள் கனடாவுக்குத் திரும்பியபோது மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹொட்டல் அறையில் இரண்டு நாட்களுக்கான செலவு 1000 டொலருக்கும் மேலாகியுள்ளது.
இன்னொரு அரைக்கு 850 டொலர் செலவாகியுள்ளது. மட்டுமின்றி, 8 பேர்களுக்கும் உணவுக்கு மட்டும் 2,800 டொலர் செலவிடப்பட்டுள்ளது. நொறுக்குத்தீனிகளுக்கு என 86 டொலர் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் இனிப்பு உட்பட பரிசுப்பொருட்களும் வாங்கிச் சென்றுள்ளனர்.
பெடரல் நீதிமன்றத்தில்
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்ட பின்னர் தொடர்புடையப் பெண்கள் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்ட நிலையில் கனடாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டனர்.
அவர்களைத் திருப்பி அழைத்துவரக் கோரி அவர்களது குடும்பத்தினர் கனேடிய பெடரல் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையிலேயே ட்ரூடோ அரசாங்கம் அந்த முடிவுக்கு வந்தது.
வெளியான அரசாங்க ஆவணங்களின்படி, குறித்த பெண்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கை சேர்ந்தவர்கள் என்றே தெரிய வருகிறது. 2022 அக்டோபர் மாதம் முதல் முறையாக சிரியாவில் இருந்து இரண்டு கனேடியப் பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கான செலவு 10,863 டொலர் என்றே கூறப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 2023ல், நான்கு பெண்கள் மற்றும் அவர்களது 10 குழந்தைகளைத் திரும்பப் பெறுவதற்காக கனேடிய அரசாங்கம் 132,445 டொலர் தொகையை செலவிட்டது.
தற்போது வெளியான இந்த 170,000 டொலர் தொகையானது, அவர்கள் 8 பேர்களும் தங்கள் மாகாணங்களுக்குத் திரும்புவதற்கு முன்பு மாண்ட்ரீலில் வந்திறங்கும் வரையான செலவுகள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |