விளாடிமிர் புடின் ஒரு பொய்யர், குற்றவாளி... வெளுத்து வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவக் கூட்டணி
அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருக்காமல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஊடுருவல்களில் இருந்து கண்டத்தை பாதுகாக்க ஐரோப்பியத் தலைவர்கள் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் உருவாகும் புதிய இராணுவக் கூட்டணியில் சேர கனடா தயார் என்று ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எஞ்சிய ஐரோப்பியத் தலைவர்களும் அப்படியான ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றார். விளாடிமிர் புடின் ஒரு பொய்யர் மற்றும் குற்றவாளி என சாடிய ட்ரூடோ, அவருடைய வார்த்தையை எந்த வகையிலும் காப்பாற்றுவார் என்று நம்ப முடியாது என்றார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட எந்த உடன்படிக்கையையும் முறியடிப்பேன் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்றும் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியாவுக்கான கனடாவின் உயர் ஆணையர் Ralph Goodale தெரிவிக்கையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உச்சிமாநாட்டின் குறிக்கோள் என்பது உக்ரைன் மக்கள் அமைதியை அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையாக நம்புவதை உறுதிசெய்யக்கூடிய நீண்ட கால பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவதாகும் என்றார்.
போர் முடிவுக்கு வரும்
ரஷ்யா உடனான நெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உக்ரைனை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சித்துள்ள நிலையிலேயே லண்டன் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பின்னர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது முழு ஆதரவையும் ஜெலென்ஸ்கிக்கு தெரிவித்திருந்தார்.
ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கட்டாயப்படுத்த, தமது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். ரஷ்யா இந்த சட்டவிரோத ஊடுருவலை நிறுத்த முடிவு செய்தால், நாளையே போர் முடிவுக்கு வரும் என்றார் கனேடிய பிரதமர்.
ஆனால், விளாடிமிர் புடினை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |