இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா?
அமெரிக்க இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 2027 நிதியாண்டிற்குள் இதுவரை இல்லாத அளவுக்கு, 1.5 டிரில்லியன் டொலராக உயர்த்த விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆபத்தான கட்டத்தில்
வெனிசுலாவிற்குள் புகுந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ள நிலையில்,
--- Reuters
அடுத்த நகர்வாக கிரீன்லாந்து மீது கவனம் செலுத்தப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பும் வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளதை அடுத்தே, ட்ரம்பின் இந்த 1.5 டிரில்லியன் டொலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்கா ஒரு சிக்கலான மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த உயர்வு என்பது நாட்டுக்கு நல்லது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் விளக்கம் அளித்துள்ள ட்ரம்ப், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், செயலாளர்கள் மற்றும் பிற அரசியல் பிரதிநிதிகளுடன் நீண்ட மற்றும் கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு,
நமது நாட்டின் நலனுக்காக, குறிப்பாக இந்த மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான காலங்களில், 2027 ஆம் ஆண்டிற்கான நமது இராணுவ நிதி ஒதுக்கீடு 1 டிரில்லியன் டொலர்களாக இல்லாமல், மாறாக 1.5 டிரில்லியன் டொலர்களாக இருக்க வேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 901 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது. மேலும், அமெரிக்க இராணுவத்திற்கான அதிகப்படியான நிதி ஒதுக்கீடு என்பது அமெரிக்காவை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்க உதவும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கடனில்
அத்துடன், மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் காரணமாக இந்த அதிகப்படியான நிதி ஒதுக்கீடு சாத்தியம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அந்த வரிகளால் அமெரிக்க அரசாங்கத்தால் செலவிடக்கூடிய திறனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவால் தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக்கொண்டு, அதே நேரத்தில் தனது கடனையும் குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
--- Reuters
இந்த நிலையில் ஃபெடரல் வரவுசெலவுத் திட்டத்திற்கான குழுவானது, ட்ரம்பின் இந்த திட்டத்தால் 2035 ஆம் ஆண்டு வரையில் 5 டிரில்லியன் டொலர் செலவாகும் என்றும், அத்துடன் அமெரிக்காவின் கடனில் வட்டியுடன் சேர்த்து 5.8 டிரில்லியன் டொலரைச் சேர்க்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
மேலும், பிற நாடுகளில் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் என்பது 2025ல் 288 பில்லியன் டொலராக இருக்கும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீப நாட்களில் 600 பில்லியன் டொலர் வசூலிக்க இருப்பதாக ட்ரம்ப் பரப்புரை செய்து வருவதற்கு இது முரணாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |