சமாதான ஒப்பந்தம் என உக்ரைனுக்கு மரண அடி தரும் ட்ரம்ப் நிர்வாகம்... முழுமையான பின்னணி
உக்ரைன் சமாதான ஒப்பந்தம் என 28 அம்ச திட்டமொன்றை ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள நிலையில், அது உக்ரைனுக்கு அளிக்கப்படும் மரண அடியாகவே பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய திட்டம்
உக்ரைன் போர் முடிவுக்கு வருவதுடன் G8 கூட்டமைப்பில் ரஷ்யாவை இணைத்துக்கொள்வார்கள். அண்டை நாடுகள் மீது விளாடிமிர் புடின் படையெடுப்பதை தவிர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் ரகசியமாக வரைவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தின் முழு விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
போரில் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ரஷ்யாவிற்கு பெரும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.
மேலும், தற்போது 900,000 மேல் உள்ள உக்ரைன் வீரர்களின் எண்ணிக்கையை 600,000 என குறைக்க வேண்டும். இனி எந்த சூழலிலும் உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் உறுப்பினர் ஆவதை தடை செய்ய வேண்டும்.
ஆனால், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என்பது மட்டுமே அந்த நாட்டிற்கு சாதகமாக அமைந்துள்ள ஒரே ஒரு அம்சம். இருப்பினும், பிரித்தானியா தலைமையிலான கூட்டணியிலிருந்து எந்தவொரு நேட்டோ துருப்புக்களையும் உக்ரைன் பிரதேசத்தில் நிலைநிறுத்துவதைத் தடுக்கிறது.

2014ல் உக்ரைன் வசம் இருந்து வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்ட கிரிமியா பகுதி, இனி ரஷ்யாவிற்கு சொந்தம் என சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்படும்.
ரஷ்ய பொருளாதாரம்
அத்துடன், உக்ரைனின் வளம் மிக்க டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கின் டான்பாஸ் பகுதிகளும் ரஷ்யாவிற்கு சொந்தம். உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை அடுத்து அமெரிக்காவுடனான புதிய நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய பொருளாதாரம் ஒரு புதிய ஊக்கத்தைப் பெறும்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் 300 பில்லியன் யூரோ தொகையில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கு அந்த நாட்டிற்கு வழங்கப்படும்.
எஞ்சிய 100 பில்லியன் யூரோ உக்ரைன் மறுகட்டமைப்பு தேவைகளுக்காக செலவிடப்படும். மேலும், உக்ரைனில் மறுகட்டமைப்பு திட்டங்களின் பலன்களை அமெரிக்கா அறுவடை செய்யும்.

ஆனால், ஐரோப்பிய நாடுகள் இன்னொரு 100 பில்லியன் யூரோ தொகையை உக்ரைனுக்கு வழங்க வேண்டும். இந்த நிலையில், சமாதான ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வரும் நாட்களில் ட்ரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |