வெறும் 60 நாட்கள்... ட்ரம்பின் ரஷ்யா மீதான தடைகள் நீக்கம் குறித்து ரூபியோ விளக்கம்
Trump to take up to 60 days to weigh Russia sanctions: ரஷ்யா மீதான தடைகள் குறித்து பரிசீலிக்க ட்ரம்ப் 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார்.
ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகளையும் சுங்க வரிகளையும் நீக்கிய மறுநாளான சனிக்கிழமையன்று, இது குறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
60 நாட்கள் வரை
ரஷ்யா தொடர்பான நிலைமையை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தொடர்பான தடைகள் மற்றும் சுங்க வரிகள் குறித்து, ட்ரம்ப் முந்தைய நாள் விலக்கு அளித்திருந்த நிலையில், அவற்றின் பொருளாதாரத் தாக்கத்தை மதிப்பீடு செய்ய அவர் 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார் என்றும் ரூபியோ சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் இடைத்தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பாகவே ட்ரம்பால் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால் ட்ரம்ப் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உக்ரைனில் விளாடிமிர் புடினின் இராணுவம் நடத்தும் போர் தொடர்பாக அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,
கடந்த மாதம் ட்ரம்ப் கையெழுத்திட்ட கிரஹாம் சட்டம் என அறியப்படும் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த முக்கியத் தடைகள் மற்றும் வரிகளைத் தள்ளுபடி செய்யும் நிர்வாக உத்தரவில் அவர் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
ரஷ்யப் பொருட்கள் மீதான சுங்க வரிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீதான அபராதங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், அடுத்த வாரம் நடைமுறைக்கு வரவிருந்தன.
வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த விலக்கு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை, ஆனால் ட்ரம்ப் 60 நாள் மறுஆய்வு காலத்தைத் தெரிவு செய்துள்ளதாக ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
புடினுக்கு வெகுமதி
ரஷ்யாவின் பொருளாதார நிலைமையை மேலும் சிக்கலாக்கும் விதமாக, அந்த நாட்டின் மீது தடைகளை விதிக்குமாறு கோருவது மட்டுமின்றி, ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வளங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் மீதும் சுங்க வரிகளை விதிக்க வேண்டும் என்று 'கிரஹாம் சட்டம்' (Graham Act) வலியுறுத்துகிறது.

தேர்தல் அழுத்தங்களால் ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றும், இது உக்ரைன் மீதான போரை நீட்டிக்கும் எனவும் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்ததுடன், ட்ரம்பின் முடிவை விமர்சிக்கவும் செய்தார்.
இதனிடையே, ஈரானுடனான போர் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளால் எரிபொருள் விலைகள் உயர்ந்திருக்கும் சூழலில், உலகச் சந்தைகளுக்கு டீசல் விநியோகத்தை அதிகரிப்பதற்காக ரஷ்யாவுடன் அமெரிக்கா செய்துகொண்ட மற்றொரு ஒப்பந்தத்தையும் ரூபியோ ஆதரித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா ஆரம்பத்தில் 300,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான டீசலை அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்திலும் அதற்குப் பின்னரும் மேலும் பல சரக்குகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் நிலவும் மோதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், அந்தச் சூழலைக் கையாள்வதில் உள்ள சவால்களையே டீசல் ஒப்பந்தமும் தடைகளிலிருந்து விலக்களிக்கும் முடிவும் பிரதிபலிக்கின்றன என்று ரூபியோ கூறியுள்ளார்.
ஆனால், ரஷ்யா மீதான ட்ரம்பின் கரிசனம், உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றே ஜெலென்ஸ்கி கொந்தளித்துள்ளார்.