உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனம்... 100 பில்லியன் டொலர் பாதுகாப்பு கட்டணம் வசூலித்த ட்ரம்ப்
பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து 100 பில்லியன் டொலர் கட்டணமாக வசூலித்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பிடம் விற்றுவிட்டதாக
இந்த மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் TSMC என்ற தைவான் நிறுவனம் அமெரிக்காவில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கொண்டாடி மகிழ்ந்தார்.
அமெரிக்க மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு இதனால் உருவாக இருப்பதாகவும் ட்ரம்ப் பெருமை பேசியிருந்தார். முக்கியமாக அரிசோனா மாகாணத்தில் இந்த முதலீடு அமைகிறது.
ஆனால் தைவானின் முன்னாள் ஜனாதிபதியான Ma Ying-jeou இந்த முதலீடு தொடர்பில் கடும் விமர்சனங்களை தற்போது முன்வைத்துள்ளார். தைவானில் தற்போது ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியானது பாதுகாப்பு கட்டணமாக TSMC நிறுவனத்தை ட்ரம்பிடம் விற்றுவிட்டதாக கொந்தளித்துள்ளார்.
இந்த ஒப்பந்தமானது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள Ma, சீன மக்களின் நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தைவானின் பன்னாட்டு அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் எனவும் சாடியுள்ளார்.
சீனா குறிவைக்கும்
தற்போதைய ஆளும் கட்சி அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டதாகவே Ma குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தற்போது உக்ரைன் எதிர்கொள்ளும் அதே நெருக்கடியை நாளை தைவான் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகள் என்றும் Ma சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனின் தோல்வியை எதிர்பார்த்து சீனா காத்திருப்பதாகவும், தைவானை கண்டிப்பாக சீனா குறிவைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு தொழிலதிபர் என்பதை தைவான் ஆளும் கட்சி மறந்துவிட வேண்டாம் என்றும், TSMC நிறுவனத்தை பாதுகாக்க ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |