சீனா, ரஷ்யாவால்... ஜனாதிபதி தேர்தல் குறித்து டொனால்டு டிரம்ப் வெளிப்படை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானால் தாம் பழி வாங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றிபெறாதது, அமெரிக்காவின் முதன்மை எதிரிகளை மகிழ்வடைய செய்திருக்கும் என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ஆய்வாளர்களின் முக்கிய அமர்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தலில் வெற்றிபெற்றும் தமது வெற்றியை அவர்கள் களவாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்பதால் பெருமகிழ்ச்சி கொள்ளும் உலக நாடுகளில் ஒன்று தென் கொரியா என குறிப்பிட்டுள்ள டிரம்ப், தமது ஆட்சியின் போதே, அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிக கட்டணத்தை வசூலிக்க ஒப்பந்தம் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
ஆனால், 2020ல் பைடன் ஆட்சிக்கு வந்ததும், அந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, தாம் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்காமல் இருக்க சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் கடுமையாக உழைத்தது என குறிப்பிட்டுள்ள டிரம்ப்,
தம்மைப் போன்று எவரும் ரஷ்யாவிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர் பாதுகாப்புக்கான கட்டணமாக தென் கொரியா அமெரிக்காவுக்கு அளித்து வந்தது.
ஆனால் தமது தோல்வியால் தென் கொரியா கண்டிப்பாக பலனடைந்திருக்கும் என்றார். அமெரிக்க வரலாற்றில் ஒருமுறை மட்டுமே வென்ற ஜனாதிபதிகளின் வரிசையில் தாம் இல்லை எனவும், தம்மிடம் இருந்து வெற்றியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர் என்றார் டொனால்டு டிரம்ப்.