3 லட்சம் டன் டீசல்: புடினுடன் பேச்சுவார்த்தையை முடித்த ட்ரம்ப்
Trump announce diesel deal with russia: அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான டன் டீசலை வழங்க, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசலை வழங்க, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
டீசல் எரிபொருள்
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் டீசல் விலையை உயர்த்துவதால், அவற்றை தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், உலக சந்தைக்கு டீசல் எரிபொருளை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்தார்.
இதுகுறித்த அவரது பதிவில், "ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிக வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நான் இப்போதுதான் முடித்தேன்; இதில் அமெரிக்க மற்றும் உலக சந்தைகளுக்கு 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை ரஷ்யா உடனடியாக வழங்குவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவம்பர் மாதத்தில் கூடுதலாக 5 லட்சம் டன்னும், அதைத் தொடர்ந்து உடனடியாக 1 மில்லியன் டன்னும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
300,000 டன்கள்
இடைக்காலத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், எரிசக்தி விலைகள் தனது கட்சிக்கு ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ள சூழலில், அவற்றை சமாளிக்க ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த ஒப்பந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான கணக்கீடுகளின்படி, ஆரம்பத்தில் தேவைப்படும் 300,000 டன்கள் என்பது தோராயமாக 2.2 மில்லியன் பீப்பாய்களுக்கு சமம். இது உலகளாவிய டீசல் தேவையின் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான அளவாகும்.
ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள் ஆகிய இரட்டை நெருக்கடிகளுக்கு இடையில், அமெரிக்காவில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா முழுவதும் சரக்குகளைக் கொண்டு செல்லும் லொறிகள் மற்றும் ரயில்களையும், நாட்டின் பெரும்பாலான விவசாய இயந்திரங்களையும் டீசல் இயக்குகிறது. இதனால் குடும்பங்களுக்கான செலவுகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
ட்ரம்பின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள், அமெரிக்காவின் தினசரி டீசல் உற்பத்தி மற்றும் நுகர்வுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியவை என்பதால், விலையில் உடனடித் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.