இது பத்தாவது போர்... லெபனான்-இஸ்ரேல் போர்நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தாம் நிறுத்திய 10வது போர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்த பெருமை
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தாம் மிகச் சிறந்த உரையாடல்களை மேற்கொண்டதாக குறிப்பிட்ட ட்ரம்ப், கிழக்கின் நேரம் மாலை 5 மணி முதல் இந்தப் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை எய்துவதற்காக, இவ்விரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகம் முழுவதும் 9 போர்களுக்குத் தீர்வு கண்டது தனக்குக் கிடைத்த பெருமை என தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இது தாம் முடிவுக்கு கொண்டுவரும் 10வது போர் எனவும் பதிவு செய்துள்ளார்.
34 வருடங்களுக்குப் பிறகு இஸ்ரேலும் லெபனானும் வாஷிங்டனில் முதன்முறையாகச் சந்தித்ததாகவும், இரு நாடுகளும் நீடித்த அமைதியை அடைவதை உறுதி செய்யுமாறு துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத் தலைவர் டான் கெய்ன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போருக்குப் பிறகு, லெபனானும் இஸ்ரேலும் பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்களின் முதல் நேரடி தூதரகப் பேச்சுவார்த்தையை செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடத்தின.
அமெரிக்காவிற்கு அடிப்பணிவதை
இருப்பினும், இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த லெபனான் அரசாங்கம் எடுத்த முடிவு ஒரு பெரும் தவறு என்றும், லெபனான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் அடிப்பணிவதைக் கைவிட வேண்டும் என்றும் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹஜ் ஹசன் வியாழக்கிழமை AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும், எதிரியுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு பெரும் பாவம் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் ஒரு பெரும் தவறு எனவும், ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன்பு தனது நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து ஹஜ் ஹசன் கூறியிருந்தார்.
லெபனானில் போர் நிறுத்தம் எட்டப்படுவதற்கு முன்பே, பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டு அமெரிக்காவின் விருப்பங்களுக்குப் பணிந்ததற்காக அவர் லெபனான் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |