அமெரிக்கா ராணுவ மேஜருக்கு மரண தண்டனை: ஒப்புதல் அளித்த டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ மேஜருக்கு மரண தண்டனை விதிக்கும் உத்தரவுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ராணுவ மேஜருக்கு தூக்குத் தண்டனை
கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி போர்ட் ஹூட் ராணுவ முகாமிற்குள் புகுந்த அமெரிக்க ராணுவத்தின் மனநல மருத்துவர் மற்றும் மேஜரான நிடால் ஹசன், சக ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த திடீர் மற்றும் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 32 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு மேஜர் நிடால் ஹசனுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனைக்கு ஒப்புதல் அளித்த டிரம்ப்
மேல்முறையீட்டு வழக்குகள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மேஜர் நிடால் ஹசனுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அளித்த பரிந்துரையை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.
கன்சாஸ் மாகாண ராணுவ சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிடால் ஹசன், இதற்காக இண்டியானாவில் உள்ள பெடரல் சிறைக்கு மாற்றப்பட்ட உள்ளார்.
இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் 1961 ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ராணுவத்தினால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.
மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்க ராணுவத்தினால் துப்பாக்கியால் சுடப்பட்டு நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையும் இதுவாகும்.
அமெரிக்கா ஜனாதிபதி மரண தண்டனை தொடர்பாக ஒப்புதல் அளித்த 60 நாட்களுக்கு பிறகு 150 நாட்களுக்குள் இந்த மரண தண்டனையானது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.