டிரம்பை கொல்ல சதி திட்டம்: பாகிஸ்தானியருக்கு 27.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Trump Assassination plot Pakistani sentenced to 27 years Prison in US: ஈரான் ஆதரவுடன் அமெரிக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு 27.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியருக்கு 27.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட அந்நாட்டின் முக்கிய தலைவர்களை கொலை செய்ய ஈரான் ஆதரவு சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபருக்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் 27.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எரிக் கோமிட்டி, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சி செய்வதை விட மிகப்பெரிய குற்றம் இருக்க முடியாது என கண்டித்து 48 வயதுடைய குற்றவாளிக்கு சுமார் 330 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

எல்லை தாண்டி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. கூலிப்படை மூலம் சதித் திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனையானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதமே அவர் அமெரிக்காவுக்கு கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தது உறுதி செய்யப்பட்டு அவரை குற்றவாளி என்று கூட்டாட்சி நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
2024ம் ஆண்டு தீட்டப்பட்ட இந்த சதித் திட்டத்துக்கு பழிவாங்கும் உணர்வே முக்கிய காரணம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி, முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி ஆகியோரும் இந்த சதித் திட்டத்தில் இலக்காக வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.