முடங்கிய காசா அமைதி பேச்சுவார்த்தை: ஹமாஸை குற்றம் சாட்டிய டிரம்ப்! பதற்றம் அதிகரிப்பு
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸை குற்றம்சாட்டியுள்ளார்.
ஹமாஸை குற்றம்சாட்டும் ட்ரம்ப்
காசாவில் போர்நிறுத்தத்திற்கான நம்பிக்கைகள் மங்கத் தொடங்கியுள்ளன. ஹமாஸ் ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க "மாற்று வழிகளை" நாடலாம் என்று சூசகமாக அறிவித்துள்ளது.
கத்தாரில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
அதே நேரத்தில், போர் பாதித்த காசா பகுதியில் மனிதாபிமான பேரழிவு அதிகரித்து வருவதாக உதவி அமைப்புகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய ஓர் இஸ்ரேலிய அதிகாரி, காசாவில் வான்வழியாக வீசப்பட்ட உதவிகள் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, உதவி விநியோகத்தில் உள்ள சவால்களை எடுத்துரைத்தார்.
களத்தில் செயல்படும் உதவி அமைப்புகளும், போர் தொடர்ந்து நீடிப்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
கத்தார் பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்கள் வெளியேறிய பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப் இந்த முட்டுக்கட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.
"இது மிகவும் வருந்தத்தக்கது. ஹமாஸ் உண்மையில் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஒரு செய்தி நிறுவனம் டிரம்பை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனிய போராளிக் குழு காசாவில் உள்ள எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிக்க தயங்குவதாகவும், "இறுதி பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, ட்ரம்ப்பின் மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், வியாழக்கிழமை முடிவடைந்த பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸ் "நம்பிக்கையுடன் செயல்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த ஹமாஸின் மூத்த அதிகாரி பஸ்ஸெம் நயிம், விட்கோஃப் பேச்சுவார்த்தைகளின் தன்மையை தவறாகப் சித்தரித்ததாகவும், முன்னர் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |