இஸ்ரேலுடன் இணைந்து... ஈரான் தாக்குதல் தொடர்பில் அதிரடியான முடிவெடுத்த ட்ரம்ப்
ஈரானுடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
விரைவாக ஒப்பந்தம்
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், உலகின் எதிர்கால நலன் மற்றும் வெற்றிகரமான, செழிப்பான ஈரானின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,

விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு வருவதாகவும், இதனால் ஈரான் தங்களிடம் கெஞ்சும் நிலை வரும் எனவும் தெரிவித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது இஸ்ரேலுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சனிக்கிழமை இரவு ஈரான் மீது புதிய, உக்கிரமானத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் ட்ரம்பிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா மீது முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்த ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு பிராந்திய நாடும் போரின் தீப்பிழம்புகளில் சிக்கிக்கொள்ளும் என்று கூறியிருந்தது.

எதிர்கொள்ள ஈரான் தயார்
ஆனால், ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஏதுவாகத் தாக்குதலை தள்ளிவைக்குமாறு ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே, தாம் இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், எந்தவொரு ஒப்பந்தம் என்றாலும், அது ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்துவிடுதல் மற்றும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் முன்னதாக, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தியிருந்தது.
அதேவேளை, ஈரானும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், ட்ரம்பின் தாக்குதல்களுக்கு பதிலடி உறுதி என்றும், எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |