ஈரானுடனான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை... திடீரென்று அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்
அமெரிக்கத் தரப்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றியின் விளிம்பில்
மத்திய கிழக்குக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானுடனான நேரடிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றுக்காக சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, அவர்களது பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன், ஈரானுடனான மோதலில் அமெரிக்காவே வெற்றியின் விளிம்பில் இருப்பதாகவும், அமெரிக்கக் குழுவினர் பாகிஸ்தானுக்கு 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு என ஈரானியர்கள் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் அமெரிக்காவை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, சனிக்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமாபாத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அங்கிருந்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிராகரித்த ஈரான்
மேலும், ஈரானின் நிபந்தனைகள் தொடர்பில் அவர் பாகிஸ்தான் பிரதமரிடம் விளக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அப்பாஸ் அராக்ச்சி மற்றும் அவரது தூதுக்குழுவினர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து ராணுவ விமானத்தின் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், அராக்ச்சி பாகிஸ்தானுக்குத் திரும்புவாரா அல்லது எப்போது திரும்புவார் என்பது குறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையின் புதிய சுற்று ஒன்றை ஈரான் முன்னரே நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |