விடாப்பிடியாக சாதித்த ஜெலென்ஸ்கி... பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல்
Trump clears $2.1 bn Patriot missile deal for Ukraine: உக்ரைனுக்கான 2.1 பில்லியன் டொலர் மதிப்பிலான பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேனின் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, அந்த நாட்டிற்கு 500 பேட்ரியாட் PAC-3 ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
பேட்ரியாட் ஏவுகணை
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கியதிலிருந்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்குப் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதற்கான மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் வகையில், 500 பேட்ரியாட் ஏவுகணைகளை 2.1 பில்லியன் டொலர் மதிப்பில் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் ஏவுகணை இடைமறிப்பான்கள் (missile interceptors) அவசரமாகத் தேவை என்று உக்ரைன் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் சூழலில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பேட்ரியாட் அமைப்பு என்பது அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிரான உக்ரைனின் மிகவும் செயல்திறன் மிக்க பாதுகாப்பு அமைப்பாகும். ஏவுகணை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், உக்ரைனுக்கு பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது;
குறிப்பாக, ட்ரம்ப் ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தத்தை அறிவித்து, கிரஹாம் சட்டத்தின் கீழ் ரஷ்யா தொடர்பான தடைகளைத் தளர்த்திய பின்னர் இந்த பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
இதனிடையே, ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் விருப்பம் காட்டாதது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கியைச் சாடினார்.

நாடு முழுவதும் எரிசக்தி மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியதால், முக்கிய ஏவுகணை விநியோகங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிப்பதற்காக உக்ரைன் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாக இந்த வாரத் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஆனால், அதன் அவசரத் தேவை இருந்தபோதிலும், உக்ரைன் அந்த இடைமறிப்பு ஏவுகணைகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தற்காப்பை வலுப்படுத்த
ஆயுத ஒப்பந்தங்கள் நிறைவடைவதற்குப் பொதுவாகப் பல ஆண்டுகள் ஆகும். மேலும், அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து அறிந்த இருவர், அந்த ஏவுகணைகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், 2030-களின் முற்பகுதி வரை அவை விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா, ஜேர்மனி மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் பங்களிப்புகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் ஆதரவுக் கடனால் நிதியளிக்கப்பட்ட தேசிய நிதிகளையும் கொண்டு, யுஎஸ் ஜம்ப்ஸ்டார்ட் (US JUMPSTART) என்ற திட்டத்தின் வாயிலாக இந்த 500 பேட்ரியாட் ஏவுகணைகளுக்கான செலவை உக்ரைன் ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
பென்டகன் இணையதளம் ஒன்றின்படி, ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைன் தனது தற்காப்பை வலுப்படுத்திக்கொள்ள, ஆயுதங்கள், சேவைகள் மற்றும் பயிற்சிகளை வாங்குவதற்காக அதன் நட்பு நாடுகள் நன்கொடைகளை வழங்க அமெரிக்காவின் JUMPSTART திட்டம் அனுமதிக்கிறது.
முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில், ஸோன் 5 டெக்னாலஜிஸ் மற்றும் கோஆஸ்பயர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட, 825 மில்லியன் டொலர் மதிப்புள்ள 3,350 வான்வழி ஏவப்படும் குரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு JUMPSTART திட்டம் பயன்படுத்தப்பட்டது.