ரஷ்யா மீது ஏவுகணை வீச்சு... உக்ரைனுக்கான கொள்கைகள் திருத்தப்படும்: ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் உக்ரைனை கடுமையாக விமர்சித்துள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் மீதான அமெரிக்காவின் கொள்கைகளில் திருத்தம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
போர் இன்னும் தீவிரமடையும்
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட டைம் இதழின் நேர்காணல் ஒன்றிலேயே அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் உக்ரைனை விமர்சித்துள்ளார்.
உக்ரைனில் நடப்பவை பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என வெளிப்படையாக விமர்சித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஏவுகணைகளை வீசுவதில் தாம் உடன்படவில்லை என்றார்.
இதை நாம் செய்வதால், போர் இன்னும் தீவிரமடையும், மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். ஒருபோதும் இப்படியான செயலை அனுமதிக்க முடியாது எனவும் பதிவு செய்துள்ளார்.
மேலும், மூன்றாண்டுகளாக நீடிக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாகவும், அதற்கான அருமையான திட்டம் ஒன்று தம்மிடம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த திட்டத்தை தாம் தற்போது வெளியிட்டால், அது பயனற்ற திட்டமாக மாறக்கூடும் என்றார்.
ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுபேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், கடந்த வாரம் பாரிஸ் நகரில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.
ஒரு முடிவுக்கு வர வேண்டும்
போரினால் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இரு தரப்பும் உடனடியாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடைகளை கடந்த மாதம் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியிருந்தார்.
இதனையடுத்தே ரஷ்யா மீது உக்கிரமான தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்து வருகிறது. ஆனால் ரஷ்ய ஆதரவாக வடகொரிய இரானுவம் உக்ரைனில் களமிறங்க இருப்பதாக தகவல் உறுதியான நிலையிலேயே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று ஜோ பைடன் நிர்வாகம் அந்த முடிவுக்கு வந்தது.
தற்போது இந்தக் கொள்கை முடிவுகளையே திருத்தம் செய்ய இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |