இது வரையில் காப்பாற்றினேன்... உலகம் உன்னை வெறுக்கிறது: நெதன்யாகுவை சபித்த ட்ரம்ப்
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது குண்டுவீச்சை மீண்டும் தொடங்குவோம் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக, டொனால்ட் ட்ரம்ப் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஆவேசமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சிறையில்
ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளத் தகவலின் அடிப்படையில், திங்களன்று நடந்த தொலைபேசி உரையாடலின்போது அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலியப் பிரதமரிடம் கடும் சீற்றத்துடன் உரையாடியதாகவே தெரிய வந்துள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உரையாடல்கள் குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிட்டு வரும் ஒரு அமெரிக்க இணையதளமாகும் ஆக்சியோஸ்.
ஆனால், இரு தலைவர்களின் உரையாடல் தொடர்பில் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளத் தகவல்களை இஸ்ரேலிய ஊடகங்களில் மறுக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவிடம் கொந்தளித்த ட்ரம்ப், பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தாம் மட்டும் இல்லையென்றால் நெதன்யாகு தற்போது சிறையில் இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
தாம் இதுவரையில் காப்பாற்றி வந்துள்ளதாகவும், தற்போது உலகமே நெதன்யாகுவை வெறுப்பதாகவும், நெதன்யாகு எடுக்கும் முடிவுகளால் உலகம் இஸ்ரேலையே வெறுப்பதாகவும் ட்ரம்ப் கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து, பெய்ரூட்டின் தெற்கு தஹியா பகுதியில் மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவிட்ட பின்னரே அந்தத் தொலைபேசி அழைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு பெய்ரூட் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு லெபனான் பொதுமக்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவுறுத்தியதால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அதிரடியாக அறிவித்தது.

மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க இராணுவ முற்றுகையை நீக்குவதற்கும் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் நோக்கம் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் லெபனானும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது.
ஈரான் விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படும் என்ற சூழல் உருவான நிலையில், அதை மொத்தமாக சீர்குலைக்கும் நடவடிக்கைகளை வழக்கம் போல இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது என்றே பல்வேறு அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சுமுகமற்ற உறவு
இதனிடையே, Channel 12 என்ற இஸ்ரேலின் சுதந்திர செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், ஜனாதிபதி ட்ரம்ப், நெதன்யாகுவை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை என்றும், ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தினால், பெய்ரூட் புறநகர்ப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதை நெதன்யாகுவும் தவிர்ப்பார் என இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலத்தில் ட்ரம்பிற்கும் நெதன்யாகுவிற்கும் இடையே சுமுகமற்ற உறவு இருந்துவந்தபோதிலும், மத்திய கிழக்குப்பகுதியில் இஸ்ரேல் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாகத் தொடர்ந்து இருந்துவருவதுடன்,
நெதன்யாகுவின் கடும் அழுத்தத்திற்கு இணங்கி இரு தலைவர்களும் கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக கூட்டாகத் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்தபோதும், நெதன்யாகுவை வெளிப்படையாகவே ட்ரம்ப் விமர்சித்தார்.
ஆனால், 12 நாட்கள் நீடித்த அந்த இராணுவ நடவடிக்கையில், ட்ரம்ப் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தார். நெதன்யாகுவின் முடிவுகளால் அமெரிக்காவில் கடும் அரசியல் நெருக்கடிகளையும் ட்ரம்ப் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
நெதன்யாகுவும் இஸ்ரேலில் அரசியல் அழுத்தத்தில் இருக்கிறார். நெசெட்டைக் கலைத்து, முன்கூட்டிய தேர்தல்களை நடத்துவதற்கான மசோதாவை, இஸ்ரேலின் நாடாளுமன்றம் இந்த வாரம் முதல் அமர்வில் ஆதரித்தது.
மட்டுமின்றி, இஸ்ரேலின் பாதுகாப்புச் சூழல் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணைகளும் தொடரவிருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |