ஹமாஸ் படைகள் அளித்த உறுதி... இஸ்ரேலிடம் கோரிக்கை வைத்த ஜனாதிபதி ட்ரம்ப்
இறந்தவர்கள் உட்பட அனைத்து பணயக்கைதிகளையும் ஒப்படைக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்ட நிலையில், காஸா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.
நிறுத்த வேண்டும்
ஹமாஸ் படைகள் அமைதி ஒப்பந்தத்திற்கு தயார் என்பதை தாம் நம்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நகர்வுகள் பெண்கள், சிறார்கள் உட்பட 66,000 பாலஸ்தீன மக்களை பலிவாங்கிய இஸ்ரேலின் மிகக் கொடூரமான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே நம்பப்படுகிறது.
இந்த நிலையில், காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், பணயக்கைதிகளை மீட்பது என்பது மிக மிக ஆபத்தானது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நகர்வுகள் அனைத்தும் காஸாவிற்கு மட்டுமின்றி, மொத்த மத்திய கிழக்கிற்கும் நீண்ட அமைதியை ஏற்படுத்தும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து பணயக்கைதிகளையும் ஒப்படைக்க இருப்பதாக ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், ஹமாஸ் இயக்கம், ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதி ஒப்பந்த விவரங்களைப் பற்றி விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்துகிறது என அறிவித்துள்ளது.
கைவிடுவதாக இல்லை
ட்ரம்ப் ஏற்கனவே ஹமாஸ் படைகளுக்கு 48 மணி நேர கெடு விதித்திருந்தார். தற்போது ஹமாஸ் படைகளின் முடிவை வரவேற்பதாக தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, ஹமாஸ் படைகள் சமாதான ஒப்பந்தத்திற்கு முழுமையாக உடன்படவில்லை என்றும், போருக்குப் பிறகு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாகக் கூறுகிறது.
மேலும், எக்காரணம் கொண்டும் ஆயுதங்களைக் கைவிடுவதாக இல்லை என்றும், இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரையில் அது சாத்தியமில்லை என்றும் ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளன.
மட்டுமின்றி, காஸாவில் இருந்து படிப்படியாக இஸ்ரேல் வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும், உடனடி முழுமையான வெளியேற்றம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் கோரிக்கை வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |