ஹார்முஸில் 100 விமானங்கள் 15,000 வீரர்களை அனுப்பிய ட்ரம்ப்: ஈரான் விடுத்த மிரட்டல்
ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை விடுவிக்க, 15,000 வீரர்களையும் 100 விமானங்களையும் அனுப்பும் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் சூளுரைத்துள்ளது.
கடுமையாகக் கையாளப்படுவார்கள்
ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை வெளியேற்றும் தனது திட்டத்தைச் சீர்குலைக்க எவரேனும் முயன்றால், அவர்கள் கடுமையாகக் கையாளப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஈரானை எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்காவும் முற்றுகையை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில், ஈரான், மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, ஹார்முஸ் நீரிணை ஊடாக கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவோம் என்று தொடர்புடைய நாடுகளிடம் தெரிவித்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நேரம் திங்களன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முற்றிலும் எவ்விதத் தவறும் இழைக்காத மக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானச் செயல் என்றே, அமெரிக்க ஜனாதிபதி தனது நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பல கப்பல்களில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், அவர்கள் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்கள் எதையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை. இதனிடையே, சிறிது நேரத்திலேயே அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (Centcom) அந்த நடவடிக்கை குறித்த சில தகவல்களை வழங்கியது.
சூளுரைத்துள்ள ஈரான்
அதாவது, 'Project Freedom'-க்கான அமெரிக்க இராணுவ ஆதரவானது, வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், 100-க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், பல களங்களில் இயங்கும் ஆளில்லாத் தளங்கள் மற்றும் 15,000 படைவீரர்களை உள்ளடக்கியிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைக் கொண்டுசெல்ல முயலும் எந்தவொரு அமெரிக்கப் படையையும் தாக்குவதாக ஈரான் சூளுரைத்துள்ளது.

மேலும், நீரிணையை நெருங்கவோ அல்லது உள்ளே நுழையவோ முயலும் எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படையையும் தங்களது படைகள் தாக்கும் என்று மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்க இராணுவம் எங்களின் முதல் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளியான தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 28-ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து வெளியேற முடியாமல், தற்போது இந்த முக்கிய வர்த்தகப் பாதையில் சுமார் 20,000 மாலுமிகளும் 2,000 கப்பல்களும் சிக்கிக்கொண்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |