அடுத்து புலம்பெயர்ந்த சிறார்களை நாடு கடத்த முடிவெடுத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம்
அடுத்தகட்டமாக பெற்றோர் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த சிறார்களை நாடு கடத்த ட்ரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்த சிறார்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்தியாவுக்கு மட்டும் இதுவரை நான்கு விமானங்கள் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த சிறார்களை நாடு கடத்த ட்ரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் வழங்கப்பட்ட உள் குறிப்பு ஒன்றில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜனவரி 27ம் திகதியே திட்டமிடல் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால் அமலாக்க நடவடிக்கைகள் எப்போது முன்னெடுக்கப்படும் என்ற திகதி வழங்கப்படவில்லை. மேலும், பெற்றோர் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த சிறார்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குடிவரவு நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்கள் மீது ஏற்கனவே நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், உடனடியாக நாடுகடத்தப்படும்.
மேலும், திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிறார்களை மூன்று முன்னுரிமை குழுக்களாக வரிசைப்படுத்த உள்ளனர். அமெரிக்க அரசாங்கத்தின் தரவுகளின்படி, 2019 முதல் 600,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த சிறார்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லாமல் அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்துள்ளனர்.
சிறார்கள் மாயம்
இதே காலக்கட்டத்தில் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான சிறார்களை நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்திலும் இப்படியான சிறார்களை கண்டுபிடித்து அகதிகள் மீள்குடியேற்ற அலுவலகத்தால் நடத்தப்படும் சிறார்கள் காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். சிறார்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து 2018 ல் ட்ரம்ப் இந்தக் கொள்கையை கைவிட முடிவு செய்தார், இருப்பினும் 1,000 சிறார்கள் வரை தற்போதும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஜோ பைடன் ஆட்சி காலத்தில், இவ்வாறு பெற்றோர் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 300,000 சிறார்கள் மாயமாகியுள்ளதாகவும், இவர்கள் குற்றவாளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ட்ரம்பின் எல்லைகளுக்கான முதன்மை கண்காணிப்பாளர் Tom Homan தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |