புடினுடனான தொலைபேசி அழைப்பு... முடிவுக்கு வரும் ஈரான் போர்: ட்ரம்ப் விளக்கம்
விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை முடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரானுடனான தனது போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவுக்குக் கொண்டுவர
ஈரானின் இராணுவம் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட ட்ரம்ப், போர் கிட்டத்தட்ட முடிவுவுக்கு வரும் தருவாயில் உள்ளது என்றார்.

அவர்களிடம் தற்போது கடற்படை இல்லை, தொலைத்தொடர்பு இல்லை, விமானப்படையும் இல்லை, இதனால் முடித்துக்கொள்ளலாம் என்ற மன நிலைக்கு வந்து விட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அவர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், ரஷ்ய ஜனாதிபதி போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தற்போதைய போர் நிலவரம் மற்றும் வெனிசுலாவின் எண்ணெய் சந்தை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
போர் முடிவுக்கு வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டதை அடுத்து பங்குச் சந்தை உயர்ந்தது. அமெரிக்க எண்ணெய் பீப்பாய்க்கு 91 டொலரில் இருந்து 86 டொலராகக் குறைந்தது.

ஹார்முஸ் நீரிணை
இதனிடையே, ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் பலம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியது.

தற்போதும் ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால், ஈரானிடம் தற்போது ஏவுகணை அல்லது ட்ரோன் இருப்புகள் எதுவும் இல்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் எண்ணெய் விலை அதிகரித்தது. பாரசீக வளைகுடாவில் தற்போதும் எண்ணெய் கப்பல்கள் சிக்கியிருப்பதால், அதைக் கைப்பற்றுவது பற்றி யோசிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |