டிரம்பின் அழைப்புகளை புறக்கணித்த கிம் ஜாங் உன் - அணு ஆயுத களஞ்சியத்தை வேகமாக அதிகரிக்கும் வடகொரியா
Trump Ignored by Kim as North Korea Expands Nukes: டிரம்பின் அழைப்புகளை கிம் ஜாங் உன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் அழைப்புகளை புறக்கணித்த கிம் ஜாங் உன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு ஆண்டாக டிரம்ப், பல்வேறு அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் கிம் ஜாங் உன்-னை தொடர்புகொள்ள முயன்றபோதும், வடகொரியாவிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலமுறை தொடர்பு கொள்ள முயன்ற டிரம்ப்
அமெரிக்காவின் Wall Street Journal வெளியிட்ட தகவலின்படி, அதிகாரப்பூர்வ தொலைபேசி இணைப்புகள் மற்றும் பிற தகவல் தொடர்பு வழிகளின் மூலம் டிரம்ப் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த முயற்சிகளுக்கு வடகொரிய அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, டிரம்ப் தனிப்பட்ட கடிதம் ஒன்றை கிம் ஜாங் உன்-க்கு அனுப்பவும் முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரிய தூதரக அலுவலகம் வழியாக வழங்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
பின்னர் ஒரு வடகொரிய தூதரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் அதை திறக்காமல் மீண்டும் அமெரிக்க பிரதிநிதியிடம் திருப்பிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 மற்றும் 2019 காலகட்டங்களில் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் 3 முறை நேருக்கு நேர் சந்தித்தனர். அந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கம் வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால் எந்த நிரந்தர ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
60 அணு குண்டுகள்
இதற்கிடையில், வடகொரியா தனது அணு ஆயுத திறனை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் 20 முதல் 30 அணு குண்டுகள் இருந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 60-ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மேலும் அமெரிக்காவை அடையக்கூடிய திட எரிபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் (ICBM) வடகொரியா உருவாக்கியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளும், கிம் ஜாங் உன் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளன. அதே நேரத்தில், வடகொரியா ரஷ்யாவுடன் தனது இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா-வடகொரியா உறவுகள் மீண்டும் முன்னேறுமா அல்லது இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |