ஏமனில் ஹவுதிகளை வேட்டையாடிய டொனால்டு ட்ரம்ப்: 30 கடந்த பலி எண்ணிக்கை
ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்.
ஆதரவை கைவிட வேண்டும்
சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை 31 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, ஹவுதிகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவை ஈரான் மிரட்டும் என்றால், அமெரிக்கா உங்களை முழுமையாகப் பொறுப்பேற்க வைக்கும், அதில் நாங்கள் கடுமையாகவே நடந்துகொள்வோம் என்றார்.
ஹவுதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது சில வாரங்கள் நீடிக்கலாம் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
இந்த நிலையில், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 101 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹவுதி நடத்தும் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல்-அஸ்பாஹி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹவுதிகளின் அரசியல் பணியகம் இந்த தாக்குதல்களை போர்க்குற்றம் என்றே அடையாளப்படுத்தியுள்ளது. மேலும், நமது யேமன் ஆயுதப் படைகள், தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக உள்ளன என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வர்த்தகத்தை சீர்குலைக்கும்
ஏமனின் தென்மேற்கு நகரமான தைஸில் உள்ள ஹவுதி இராணுவ தளங்களையும் அமெரிக்கா குறிவைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஹவுதிகள், நவம்பர் 2023 முதல் உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைக்கும் வகையில் அதன் கடற்பகுதியில் கப்பல்கள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு முதல் ஹவுதிகள் அமெரிக்க போர்க்கப்பல்களை 174 முறையும், வணிகக் கப்பல்களை 145 முறையும் தாக்கியுள்ளனர் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால், ஹமாஸ் படைகளுக்கு எதிராக காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போருக்கு பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதிகள் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |