உக்ரைன் போர் தொடர்பில் டொனால்டு ட்ரம்பின் ரகசிய திட்டம் கசிந்தது
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்டு ட்ரம்பின் திட்டம் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிபந்தனைகளில் ஒன்றாக
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடி சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க ஜனாதிபதி ட்ரம்ப் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் கசிந்துள்ளது.
அதில், போர்க்களத்தில் ரஷ்யாவின் நிலையான இராணுவ முன்னேற்றத்தை நிறுத்துவது ஒரு சாத்தியமான போர்நிறுத்தத்திற்கான நிபந்தனைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
அத்துடன் ரஷ்யாவுக்கு சாதகமாக உக்ரைனை நேட்டோவில் இணைவதற்கு தடை விதிப்பது என்பதும் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட நிலத்தில் உக்ரைன் ரஷ்ய இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க முன்மொழிவு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அப்படியான ஒரு நகர்வை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒருபோதும் ஏற்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ரஷ்யாவிற்கு தங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது குறித்த எந்தவொரு ஆலோசனையையும் உக்ரைன் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
ஆனால் எந்தவொரு இராணுவக் கூட்டணியில் சேரும் தனது விருப்பத்தை உக்ரைன் கைவிட வேண்டும் என்று புடின் கோரியுள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரஷ்யா உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை ஆக்கிரமித்துள்ளது.
3 முதல் 3.5 மில்லியன் உக்ரேனிய மக்கள் இந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தம்மால் முடியும் என பரப்புரை செய்து வந்த ட்ரம்பால், இதுவரை உறுதியான எந்த முடிவையும் அறிவிக்க முடியவில்லை.
இருவரும் சந்திப்பதற்கான
இதனையடுத்து முதல் 100 நாட்களில் உக்ரைன் போர் தொடர்பில் தீர்வு எட்டப்படும் என அறிவித்துள்ளார். அடுத்த வாரம் ஜேர்மனியில் பாதுகாப்பு மாநாடின் போது தமது திட்டம் குறித்து அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இதனால், ஈஸ்டர் பண்டிகையின் போது ஒப்பந்தம் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது. புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே தொலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மார்ச் மாதம் இருவரும் சந்திப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
போர் முடிவுக்கு வருவது தொடர்பான அறிவித்தல் மே 9ம் திகதி வெளியிடப்படும். அதன் பின்னர் உக்ரைன் இராணுவச் சட்டத்தை நீட்டிக்கவோ அல்லது துருப்புக்களை அணிதிரட்டவோ வேண்டாம் என்று கேட்கப்படும்.
கசிந்துள்ள இந்த தரவுகளின் அடிப்படையில், ஜெலென்ஸ்கி தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரஷ்யா உடனான ஒரு ஆக்கப்பூர்வாமன பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |