5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமானம்
வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு தனிப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட ட்ரம்ப் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் பேசியுள்ளார்.
ஆனால் எந்த நாட்டின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. இதே கருத்தை ஏற்கனவே பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்தியா தரப்பில் இதுவரை போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.
பெரிதும் கொண்டாடப்பட்ட ரஃபேல் போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதாக அமெரிக்காவும், அந்த விமானத்தை தயாரித்த பிரான்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்ட நிலையிலும், இந்தியா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், போர் என்றால் இழப்புகள் இருக்கும் என இராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். பிரான்சில் தயாரிக்கப்பட்ட மூன்று ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய விமானிகளை சிறைபிடித்தது என்றும் பாகிஸ்தான் கூறி வந்தாலும், இதுவரை அதை உறுதிப்படுத்த எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது.
போர் நிறுத்தம்
இருப்பினும், ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், அதன் விமானிகள் பாகிஸ்தான் வசம் சிக்கவில்லை என்றும் இந்தியா கூறி வருகிறது. ஆனால், ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் விமானி ஷிவாங்கி சிங் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் என்ன ஆனார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மே 10 அன்று அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம், அமெரிக்க இராஜதந்திர தலையீட்டின் விளைவாகும் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்திய அரசாங்கம் இதை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
உண்மையில், போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் தரப்பில் இருந்தே முதலில் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னரே இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவிப்பை வெளியிட்டனர்.
மே 7 ஆம் திகதி இரவு விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் ஒருங்கிணைந்த தாக்குதல்களுடன் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியது. மே 11 அன்று அனைத்து இந்திய விமானிகளும் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாக ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |