பல ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களை நாடுகடத்தும் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய திட்டத்தில் அதிரடி திருப்பம்
ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக பல ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களை நாடுகடத்தும் திட்டத்திற்கு சிறப்பு ஆணை வெளியிடுவதாக டொனால்டு ட்ரம்ப் கூறி வந்துள்ளார்.
கடும் பின்னடைவு
தற்போது அவரது இந்த திட்டத்திற்கு பேரிடியாக சொந்த கட்சியினரே களமிறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதியில் அரசாங்கத்திற்கான நிதியுதவி பிரேரணை முன்னெடுக்கப்பட்டதில் 38 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க மறுத்துள்ளனர்.
குறித்த மசோதாவை டொனால்டு ட்ரம்ப் ஆதரித்தும், எலோன் மஸ்க் தமது சமூக ஊடக பக்கத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டும் இறுதியில் அந்த பிரேரணை வெற்றியடையவில்லை.
இதனால், ஆட்சிக்கு வரும் முன்னரே டொனால்டு ட்ரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். அத்துடன், அவரது ஆட்சியும் இனி கூச்சல் குழப்பம் நிறைந்தவையாகவே காணப்படும் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், கடைசி நொடியில் அரசாங்க அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா தப்பியுள்ளது. ஆனால், ட்ரம்புக்கான மிக முக்கியமான சவாலாக நாடுகடத்தல் வாக்குறுதியை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
ட்ரம்பின் நாடுகடத்தல் திட்டத்திற்கு ஆண்டுக்கு 80 பில்லியன் டொலர் செலவாகும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. தமது திட்டத்திற்கான செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் ட்ரம்ப் தமது பரப்புரைகளில் குறிப்பிட்டிருந்தார்.
20 மில்லியன் மக்கள்
ஆனால் தற்போது சில அமைப்புகள் முன்னெடுத்துள்ள ஆய்வில், ஆண்டுக்கு 1 மில்லியன் புலம்பெயர் மக்களை நாடுகடத்த 88 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்றே தெரிய வந்துள்ளது.
புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ட்ரம்பின் திட்டத்திற்கு பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் கடனுக்கு மேல் கடனைக் குவிக்க அவர்கள் விரும்பவில்லை.
அமெரிக்காவின் கடன்களுக்கான வட்டித் தொகை மட்டும் தற்போது முழு பாதுகாப்பு அமைச்சக பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது என்றே கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்பின் குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்ற குடியரசுக் கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மில்லியன் மக்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றவே டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |