வெனிசுலாவில் முதலீடு... பெரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றை மிரட்டிய டொனால்ட் ட்ரம்ப்
எக்ஸான் மொபில் நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்வதை தாம் தடுக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
சட்டங்களை மாற்ற வேண்டும்
வெனிசுலா முதலீடு செய்ய உகந்த நாடல்ல என எக்ஸான் மொபில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய கருத்து ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், குறைந்தது 17 எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் ஜனாதிபதி ட்ரம்ப் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
அதில், வெனிசுலா முதலீட்டு வாய்ப்பாக மாறுவதற்கு முன்பு, அது தனது சட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எக்ஸான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேரன் வுட்ஸ், ட்ரம்பிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய கூட்டத்தில் வெனிசுலாவின் எண்ணெய் தொழிலை புத்துயிர் பெறச் செய்வதற்காக 100 பில்லியன் டொலர் செலவிடுமாறு ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், எக்ஸான் நிறுவனம் அளித்த பதில் ட்ரம்பை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. எக்ஸான் நிறுவனத்தின் பதில் தமக்கு பிடிக்கவில்லை என்றே ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் முதலீடு செய்வதில் இருந்து அவர்களை விலக்குவேன் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவாதாக நினைக்கிறார்கள் என்றார்.

எக்ஸான், ConocoPhillips, Chevron ஆகிய மூன்று பெரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களே கடந்த பல வருடங்களாக வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனமான PDVSA உடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளது.
மூன்றாவது முறையாக
ஆனால் 2004 மற்றும் 2007 காலகட்டத்தில் வெனிசுலா எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட நிலையில், எக்ஸான் மற்றும் ConocoPhillips நிறுவனங்கள் வெனிசுலாவை விட்டு வெளியேறின.
ஆனால், Chevron புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு தற்போதும் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், தேசியமயமாக்கல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெனிசுலா நிர்வாகம் தற்போது கோனோகோஃபிலிப்ஸ் மற்றும் எக்ஸான் ஆகிய நிறுவனங்களுக்கு கூட்டாக 13 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைக் கடன்பட்டுள்ளது.

வெனிசுலா நிர்வாகம் தங்கள் சொத்துக்களை முடக்கியுள்ளனர் என குறிப்பிட்ட எக்ஸான் நிர்வாகம், மூன்றாவது முறையாக மீண்டும் நுழைவதற்கு, நாம் அங்கு வரலாற்று ரீதியாகக் கண்டவற்றிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவைப்படும் என்றார்.
இதனிடையே, ConocoPhillips நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், பெருந்தொகை திருப்பிக்கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருப்பினும், தமது நிர்வாகம் முடிவு செய்யும், எந்த நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |