உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு
லத்தீன் அமெரிக்கக் கடற்பகுதியில் உலகின் மிகப்பெரிய போர் கப்பல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கியுள்ள நிலையில், எதிர்த்துப் போராட ஒரு குட்டி நாடு தயாராகி வருகிறது.
இராணுவப் படையெடுப்பு
அமெரிக்காவின் USS Gerald R. Ford என்ற விமானம் தாங்கும் போர் கப்பலானது 4000 வீரர்கள் மற்றும் டசின் கணக்கான போர் விமானங்களுடன் வெனிசுலா அருகே நுழைந்துள்ளது.

1989 ஆம் ஆண்டு பனாமா மீதான படையெடுப்பிற்குப் பிறகு, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவப் படையெடுப்பு இதுவென்றே கூறப்படுகிறது.
வெனிசுலா நிர்வாகத்திற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்பின் மிகக் கடுமையான எச்சரிக்கை இதுவென்றும் கூறுகின்றனர். போதைப் பொர்ட்களுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை இதுவென ட்ரம்ப் நிர்வாகம் கூறி வந்தாலும்,
வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே ட்ரம்பின் இலக்கு என கூறுகின்றனர். அத்துடன் ட்ரம்பின் உண்மையான இலக்கு நிக்கோலஸ் மதுரோ மட்டுமே என்றும் பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதனிடையே, கரீபியன் முழுவதும் போதைப்பொருள் வேட்டைக்கு என மட்டுமே USS Gerald R. Ford களமிறக்கப்பட்டுள்ளதாக பென்டகன் விளக்கமளித்துள்ளது.

வெனிசுலாவில் இன்னும் தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிடவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கு முன்பே, அடுத்த இலக்கு அந்த நாடு என ட்ரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
இரண்டே மணி நேரத்தில்
ஆனால், வெனிசுலா நிர்வாகம் ஒரு நம்பிக்கையற்ற போராட்டத்திற்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது. வெனிசுலா பழைய ரஷ்ய ஆயுதங்களையே நம்பியுள்ளது, மேலும் அமெரிக்கா தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் கலைந்து சென்று ஒளிந்து கொள்ளுமாறு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கசிந்த தகவலின் அடிப்படையில், முதல் அமெரிக்கத் தாக்குதலின் போது, படைகள் சிதறி ஒளிந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளன, நாடு முழுவதும் 280 க்கும் மேற்பட்ட இடங்களில் சதிவேலைகளைச் செய்ய சிறிய பிரிவுகளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெனிசுலா மீது ட்ரம்ப் இராணுவம் தாக்குதலைத் தொடங்கினால், இரண்டே மணி நேரத்தில் முடித்து விடுவார்கள் என்றும் மதுரோ அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
மட்டுமின்றி, உலகின் மிகவும் பலம்பொருந்திய ஒரு நாட்டுடன் மோதுவதற்கு உண்மையில் வெனிசுலா தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |