அவர்கள் விரும்பினாலும் இல்லை என்றாலும்... கிரீன்லாந்து அச்சுறுத்தலை அதிகரித்த ட்ரம்ப்
கிரீன்லாந்து மக்கள் விரும்பினாலும் இல்லை என்றாலும் அமெரிக்கா தனது முடிவில் உறுதியாக உள்ளது என அச்சுறுத்தல்களை இரட்டிப்பாக்கியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்.
முடிவில் உறுதியாக
வெள்ளை மாளிகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து தொடர்பான தனது கருத்துக்களை நியாயப்படுத்தியுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தவில்லை என்றால், நாளை ரஷ்யா அல்லது சீனா இதை செய்யும் என்றார். மேலும் நாம் ரஷ்யாவையோ அல்லது சீனாவையோ அண்டை நாடாகக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாம் கிரீன்லாந்து தொடர்பான முடிவில் உறுதியாக இருக்கிறோம், நல்ல வழியிலோ அல்லது கடினமான வழியிலோ அதை சாத்தியப்படுத்துவோம் என்றார்.
பெருமளவில் தன்னாட்சி பெற்ற ஆர்க்டிக் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான தனது நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்பாக, அமெரிக்காவிற்கும் டென்மார்க் உட்பட அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் உரசல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ட்ரம்பின் இந்த நிலைப்பாட்டை கிரீன்லாந்தும் டென்மார்க்கும் மொத்தமாக நிராகரித்துள்ளன. மட்டுமின்றி, கிரீன்லாந்து மீதான அமெரிக்க தாக்குதல் நேட்டோவின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் ட்ரம்ப் தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக உள்ளார் என்றே தெரிய வருகிறது. மேலும், அமெரிக்கா இல்லாமல் ஏது நேட்டோ அமைப்பு என்றும் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

கிரீன்லாந்து மீதான விருப்பம்
ஆனால் அமெரிக்கா ரஷ்யாவையோ அல்லது சீனாவையோ கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கப் போவதில்லை, அமெரிக்கா தற்போது இதை செய்யாவிட்டால் அதுதான் நடக்கும் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
2019ல் தனது முதல் ஆட்சியின் போதே கிரீன்லாந்து மீதான தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். அப்போதே டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களிடம் இருந்து உடனடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வெனிசுலாவில் புகுந்து அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்ததன் பின்னர், கிரீன்லாந்து மீதான தனது திட்டத்தை அவர் தொடர்ந்து பேசுபொருளாகவே முன்வைத்து வருகிறார்.
இதற்கிடையில், கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க மறுப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர், 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, 85 சதவீத மக்கள் ட்ரம்பின் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவில் 7 சதவீத மக்கள் மட்டுமே கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்பிற்கு ஆதரவளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |