தேர்தல் மோசடி குறித்து தகவலளித்தால் ரூ.9.51 கோடி பரிசு - ட்ரம்ப் அறிவிப்பு
trump offers 1 million usd for voter fraud report: தேர்தல் மோசடி குறித்து தகவலளித்தால் ரூ.9.51 கோடி வழங்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிரேசில் தேர்தல்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், வலதுசாரி வேட்பாளரான பிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யபட்டுள்ளார்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள வலதுசாரி வேட்பாளரான பிளாவியோ போல்சோனாரோ, இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், "நான் எந்தப் பக்கமும் சாரவில்லை, ஆனால் வெளிப்படையாகச் சொல்வதானால், இது மற்றுமொரு முறைகேடான தேர்தல் போலவே தோன்றியது, உலகிற்கு ஒரு மோசமான தோற்றம்" என்று கூறியுள்ளார்.
தேர்தல் மோசடி குறித்து தகவலளித்தால் ரூ.9.51 கோடி
இதே போல் அமெரிக்காவிலும் வரும் நவம்பர் 3 ஆம் திகதி இடைதேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்காளர் மோசடி குறித்து தகவலளிப்பவர்களுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த தேர்தல்களிலோ அல்லது வரவிருக்கும் 2026 இடைக்காலத் தேர்தலிலோ நடந்த வாக்காளர் மோசடி குறித்துப் புகார் அளிக்கும் எவருக்கும், அந்த மோசடியைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் 1,000,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.9.51 கோடி) வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியரசுக் கட்சியினர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.4.75 லட்சம்) வழங்குவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், அரசு நிதியை கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்துகிறார் என ஜனநாயக கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
குடியரசுக் கட்சியினர் இடைத்தேர்தலில் தோல்வியடைவார்கள் எனத் தோன்றும் நிலையில், தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்த சந்தேகங்களை டிரம்ப் தூண்டி வருவதாகவும், தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் முறைகேடுகளே, 2020 ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் என ட்ரம்ப் பல ஆண்டுகளாக கூறி வருகிறார்.