ஜெலென்ஸ்கியின் பதவியை குறிவைக்கும் அமெரிக்கா... அதிகாரிகள் கடும் அழுத்தம்
அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என ட்ரம்பின் உயர்மட்ட அதிகாரிகள் அழுத்தமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலக வேண்டும்
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர், ட்ரம்ப் நிர்வாகத்துடனான உறவுகளை சீர்படுத்துமாறு உக்ரேனியர்களிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே, ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்காலம் குறித்து வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு ரஷ்யாவையும் அனுசரித்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு உக்ரைன் தலைவர் நமக்குத் தேவை என மைக் வால்ட்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தனிப்பட்ட விருப்பம் அல்லது அரசியல் ஆதாயம் அவரது நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து வேறுபட்டவை என்பது தெளிவாகத் தெரிந்தால், அதற்கான விலையை அவர் அளிக்க வேண்டியிருக்கும் என்றும் மைக் வால்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் தயாரல்ல
இதனிடையே தூதர் லார்ட் மாண்டல்சன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ட்ரம்புடனான கருத்து மோதலை கைவிட்டு, கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெலென்ஸ்கியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்களை குறிவைக்கும் அமெரிக்கா, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க மறுத்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாரல்ல என்றே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெடித்த கருத்து மோதல் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |