ஹார்முஸ் நீரிணையில்... அந்தப் படகுகளைக் கண்டதும் சுட உத்தரவிட்ட ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்தை முடக்கும் வகையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் சிறிய ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிப்தி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடற்படைக்கு உத்தரவு
ஈரானிய எண்ணெய் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தனது பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் எந்தவொரு படகையும், அவை சிறிய படகுகளாக இருந்தாலும் சரி, சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன், என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் எந்தத் தயக்கத்திற்கும் இடமில்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தங்களது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தற்போது ஜலசந்தியைச் சுத்தம் செய்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள், நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்களைத் தாக்கி, அவற்றில் இரண்டைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சட்டவிரோத நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் கப்பல்கள் எங்கிருந்தாலும் அவற்றை இடைமறிக்கவும், நாங்கள் உலகளாவிய கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை
செவ்வாயன்று, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையைத் தொடர்ந்தபடியே, ட்ரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்தார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம், ஹார்முஸ் நீரிணை ஊடாக நடைபெறும் கிட்டத்தட்ட அனைத்து ஏற்றுமதிகளையும் மொத்தமாக முடக்கியுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா ஆகிய கடற்பரப்புகளில் 30-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

தாக்குதல் அச்சுறுத்தல், அதிகரித்து வரும் காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற அச்சங்கள் காரணமாக, அந்த நீரிணை வழியாகப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனையடுத்து ஈரானுக்கு அழுத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவும் கடற்படை முற்றுகையை முன்னெடுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |