ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் ஒரு கேலிக்கூத்து: காஸா மக்கள் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள சமீபத்திய அமைதித் திட்டம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக காஸா மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபோதும் ஏற்காது
அந்த திட்டத்தை நிராகரித்துள்ளதுடன், போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிய ஒரு கேலிக்கூத்து என்றும் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு திட்டம் அதுவென்றே காஸா மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஹமாஸ் ஒருபோதும் ஏற்காது என்பதை தெரிந்து கொண்டு இஸ்ரேலும் அமெரிக்காவும் அந்த திட்டத்தை வகுத்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இதனால், அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என குறிப்பிட்டு, போரை நீட்டிக்கும் கொடூர சதித் திட்டம் இதுவென்றும் தெரிவிக்கின்றனர். அதனாலையே, அமைதித் திட்டத்தை ஏற்க ஹமாஸ் மறுத்தால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் மிரட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர தனது 20 அம்சத் திட்டத்தை ட்ரம்ப் திங்களன்று வெளியிட்டார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான பேச்சுவார்த்தையை அடுத்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதற்கு ஆதரவளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் வெளிப்படையாக அறிவித்துள்ளதே, தற்போது காஸா மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தில், உடனடியாக போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுவிப்பு, ஹமாஸ் படைகள் மொத்தமாக ஆயுதங்களைக் கைவிடுதல் மற்றும் காஸாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் படிப்படியாக வெளியேறுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக அமைப்பு
மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த இராணுவம் ஒன்று காஸாவில் களமிறக்கப்படும், ட்ரம்ப் தலைமையில் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும், அதில் உலகத் தலைவர்கள் இடம்பெறுவார்கள்.
மேலும், ஹமாஸ் மற்றும் பிற குழுக்கள் எதுவும் காஸா நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலும் எந்தப் பங்கையும் கொண்டிருக்காது என்றும் இந்தத் திட்டம் கூறுகிறது.
ஆனால், இந்தத் திட்டம் ஹமாஸ் படைகளை ஏமாற்றி காஸாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும், அதற்கு ஈடாக காஸாவில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை என்றும் பாலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |