உக்ரைன், ஐரோப்பாவுக்கு பேரிடி... ரஷ்யா மீதான மொத்த தடைகளையும் நீக்க ட்ரம்ப் முடிவு
ரஷ்யாவின் பொருளாதாரத்தை மொத்தமாக பாதிக்கும் தடைகள் அனைத்தையும் கைவிட ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடைகளின் பட்டியல்
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதன் மூலம் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த உதவும் என்று ட்ரம்ப் நிர்வாகம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, விரைவாக தளர்த்தப்படக்கூடிய தடைகளின் பட்டியல் ஒன்றை தயார்படுத்தவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோரியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த முடிவு தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், அமெரிக்காவின் இந்த எதிர்பாராத முடிவுக்கு ரஷ்யாவிடம் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதில் உறுதியான தகவல் இல்லை.
மேலும், உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஜெலென்ஸ்கி விரும்பவில்லை என தமது சமூக ஊடக பக்கத்தில் ஜனாதிபதி டர்ம்ப் கடுமையாக சாடியதன் சில மணி நேரத்தில், ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்த அமெரிக்கா முடிவெடுத்துள்ள தகவல் கசிந்துள்ளது.
மேலும், தற்போதைய கசப்பான சூழலில் ரஷ்யா முன்னெடுத்துள்ள இந்த போர் முடிவுக்கு வருவது வெகு தொலைவில் உள்ளது என தமது ஆதங்கத்தை ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளதை காரணமாக குறிப்பிட்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.
உக்ரைனை கைவிட்டு
மேலும் இதுவரை ஜெலென்ஸ்கி கூறிய கருத்துகளில் மிக மோசமானது இதுவென்றும் ட்ரம்ப் சாடியுள்ளார். அமெரிக்கா இதை நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ளாது என்றார்.
இதனிடையே, தமது டுவிட்டர் பக்கத்தில் உக்ரைனுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் எலோன் மஸ்க், காலாகாலத்திற்கும் போரை நீட்டிக்கொண்டு செல்லவே ஜெலென்ஸ்கி விரும்புகிறார், இது தீமையின் உச்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் - ரஷ்யா போரின் முடிவு எப்படி இருக்கும், ட்ரம்ப் எப்படியான முடிவெடுப்பார் என தேர்தலுக்கு முன்னர் அப்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறிய கருத்துகள் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
ரஷ்ய ஆதரவாளரான டொனால்டு ட்ரம்ப், கண்டிப்பாக உக்ரைனை கைவிட்டு ரஷ்யாவை போரில் வெல்ல வைப்பார் எனவும், இதுவே 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்ரம்ப் கூறி வருவதன் பின்னணி என்றும் அப்போது கமலா ஹாரிஸ் வெளிப்படையாக கூறியிருந்தார்.
தற்போது அதுவே நடந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |