ஈரான் தொடர்பில் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கவிருக்கும் ட்ரம்ப்: அதிகாரிகள் தீவிரம்
ஈரான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கிய முடிவொன்றை எடுக்க இருப்பதாகத் தகவல் கசிந்துள்ள நிலையில், வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அவரது உயர்மட்ட உதவியாளர்கள் வகுத்து வருகின்றனர்.
பதற்ற நிலை
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இதுவரை உறுதியான ஒரு தீர்வை எட்டாத நிலையில், இராணுவ நடவடிக்கை மட்டுமே பதில் என ட்ரம்ப் முடிவு செய்யலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பதற்கும், அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்ப் ஒரு அரசியல் வெற்றியை உரிமைகோர அனுமதிப்பதற்கும் வழிவகுக்கும் ஒரு சமரசத்தை ஏற்படுத்த, பிற நாடுகளும் முயன்று வருகின்றன.
ஆனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளார். இந்த நிலையில், ஈரானின் அமைதி ஒப்பந்தத்தில் முதல் வாக்கியம் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் அதைத் தூக்கி எறிந்துவிடுவேன் என ட்ரம்ப் வெளிப்படையாகவே விளக்கமளித்துள்ளார்.
சீனாவில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து உடனடியாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் சீனா, எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் பெருமளவில் ஈரானையே நம்பியுள்ளது.
ஈரான் விவகாரத்தை தாம் சீன ஜனாதிபதியுடன் விவாதித்ததாகக் கூறும் ட்ரம்ப், ஆனால் ஈரான் மீது அழுத்தமளிக்க வேண்டும் என தாம் கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டுப் பயிற்சி
இதனிடையே, பென்டகன் அனைத்துச் சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாத போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ஆபரேஷன் எபிக் ஃபியூரி நடவடிக்கை, புதிய செயல்பாட்டுப் பெயரின் கீழ், மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு இராணுவத் திட்டமிடுபவர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள், போர்நிறுத்தத்திற்குப் பிறகு தங்களின் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஈரான் மீதான மிகப்பெரியத் தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத நாடாக அறியப்படுவதை சீனா விரும்பவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டாலும், இந்த விவகாரத்தில் சீனா இதுவரை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதியின் கூட்டறிக்கையிலும், இந்த விவகாரம் குறிப்பிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |