இவர்களுக்கு அதிக முன்னுரிமை... ரத்தாகும் TPS: ட்ரம்பின் புதிய அகதி அந்தஸ்து திட்டம்
அமெரிக்காவால் ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் திட்டம் ஒன்றை ட்ரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது.
7,500 அகதிகள்
இதுவரை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிகவும் குறைவு என்பதுடன், தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

புதிய கொள்கையின் கீழ், 2026 நிதியாண்டில் அமெரிக்கா 7,500 அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஜோ பைடன் ஆட்சியின் போது இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 100,000 என இருந்தது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டமானது அக்டோபர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும். தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் மற்றும் தங்கள் சொந்த நாடுகளில் சட்டவிரோத அல்லது நியாயமற்ற பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பிறருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு, குடியரசுக் கட்சி ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் அகதிகள் வருகையை தடாலடியாக நிறுத்தினார். ஆனால் அப்போதும் தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் விடயத்தில் ட்ரம்ப் ஆதரவாக இருந்தார்.
கடந்த மே மாதம் தென்னாப்பிரிக்காவின் முதல் ஐரோப்பிய குடியேறிகளின் சந்ததியினர் 50 பேர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்தது. தேர்தல் பரப்புரையின் போதே மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதாக ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.

ஒரு உயிர்நாடியாக
ஜனவரி மாதம் அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, போர், துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறையிலிருந்து தப்பி வெளியேறும் குடும்பங்களுக்கு அமெரிக்க அகதிகள் திட்டம் ஒரு உயிர்நாடியாக இருந்து வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முதல் வெனிசுலா, சூடான் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளில் நெருக்கடியான சூழல் உருவான நேரத்தில் அமெரிக்க நிர்வாகம் ஆதரவாக இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது ட்ரம்ப் நிர்வாகம் அகதிகள் எண்ணிக்கையை சாதனை அளவுக்கு குறைத்துள்ளதுடன் TPS எனப்படும் தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை திட்டத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

TPS ரத்து செய்யப்படுவதால் ஆப்கானியர்கள், ஹைட்டியர்கள், வெனிசுலா மக்கள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
போர், இயற்கை பேரழிவுகள் அல்லது பிற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதுகாப்பாக நாடு திரும்ப முடியாத வெளிநாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா TPS வழங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        