மீண்டும் போர் மூளும் அபாயம்... ஈரானின் 7 நாள் அமைதித் திட்டத்தை நிராகரித்த ட்ரம்ப்
Trump Rejects Tehran's 7-Day Peace Plan: தெஹ்ரானின் 7 நாள் அமைதித் திட்டத்தை ட்ரம்ப் நிராகரித்தார்.
ஈரானின் ஏழு நாள் போர்நிறுத்த முன்மொழிவை ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் நிராகரித்துவிட்டதாகவும், நவம்பரில் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு நாட்களுக்குள்
அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை நடத்திய பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதல்களை ஏழு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் ஈரான் முன்மொழிந்திருந்தது.

கத்தார் ஊடாக அமெரிக்காவிடம் ஏழு நாட்கள் கொண்ட ஒரு உறுதியான திட்டத்தை ஈரான் தெரிவித்துள்ளது. தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஏழு நாட்களுக்குள் அந்த நீரிணையை மீண்டும் திறந்து,
இயல்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்திருந்தார்.
மேலும், தற்போது முடிவெடுக்கும் பொறுப்பு அமெரிக்காவிடம் உள்ளது. ஈரான் வற்புறுத்தலையோ, அச்சுறுத்தல்களையோ, அல்லது மிரட்டல்களையோ ஏற்காது; மட்டுமின்றி, அழுத்தத்தின் காரணமாக ஈரான் தனது இறையாண்மை உரிமைகளை விட்டுக்கொடுக்காது எனவும் அராக்ச்சி தெரிவித்திருந்தார்.
ஆனால், சில மணிநேரங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் அந்தப் பரிந்துரையை நிராகரித்துவிட்டதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டது. அத்துடன், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது என்று உறுதியளித்துள்ள ட்ரம்ப்,
அந்த கோரிக்கைகளை ஈரான் நிறைவேற்றும் என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்; மேலும், மீண்டும் குண்டுவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக உக்ரைன் விவகாரத்தில் ஒரு முக்கியமான முடிவெடுக்கும் வாய்ப்பு அமையும் தருணத்தில், விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு விவாதித்துவிட்டு, முடிவெடுக்காமல் கைவிட்டுவிடும் குணம் கொண்ட டொனால்ட் ட்ரம்ப், ஈரான் விவகாரத்தில் கண்டிப்பாக இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர், ஈரான் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கலாம் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையை வட்டமிடப்பட்டு "ட்ரம்ப் நீரிணை" என்று பெயரிடப்பட்ட வரைபடம் அடங்கிய ஒரு படத்தையும் அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டு அவரது மனநிலையை உலக மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தி, லெபனானையும் உள்ளடக்கிய போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால், ஏழு நாட்களில் ஹார்முஸை மீண்டும் திறந்து, தனது அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவோம் என்று ஈரான் கூறியுள்ளது.
முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பு ஒன்றில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அந்த முன்மொழிவு குறித்து விவாதித்தார்.
ஈரானின் புதிய இந்த முன்மொழிவு, ஜூன் மாதத்தில் எட்டப்பட்டு இஸ்ரேலின் தலையீட்டால் பின்னர் முறிந்துபோன ஓர் ஒப்பந்தத்தை ஒத்திருந்தது.
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி பெஸெஷ்கியன் ஆகியோர் ஜூன் 17 அன்று 14 அம்ச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளையும் கடமைப்படுத்துவதற்கும் வழிவகை செய்கிறது.
ஆனால், ஜூலை 8 ஆம் திகதி அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து அமெரிக்கா தனது அனைத்து உறுதிமொழிகளையும் மீறியதாகக் குற்றம் சாட்டி, ஈரான் ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்தது.
அப்போதிருந்து, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்பதை ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.