FlyDubai விமானி ஈரானுடன் தொடர்புடையவர்... அம்பலப்படுத்திய ட்ரம்ப்
FlyDubai pilot may be linked to Iran: ஃப்ளைதுபாய் (FlyDubai) விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாம்.
விமானியைக் கத்தியால் தாக்கிய பின்னர் விமானத்தைக் கடத்த முயன்ற ஃப்ளைதுபாய் துணை விமானிக்கு ஈரான் இராணுவத்துடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தீவிர நடவடிக்கை
அத்துடன், அவர் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். புதன்கிழமையன்று துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியில், துணை விமானி விமானத்தின் கேப்டனைக் கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த விமானி காக்பிட் கதவைத் திறந்ததைத் தொடர்ந்து, பயணிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததால், ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
அந்த விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்; அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலியர்கள். இந்த நிலையில், விமானத்தின் துணை விமானிக்கு ஈரானுடனும், அந்நாட்டின் உயர்மட்ட இராணுவப் பிரிவான 'இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை'யுடனும் (IRGC) தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியத் தனது நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக ட்ரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.
உண்மையில் அந்த துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், தமக்கு தெரிந்த வரையில் அவர் ஈரானுடன் தொடர்புடையவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தத் தாக்குதலுக்கு ஆதரவளித்ததற்காக ஈரானை அமெரிக்கா தண்டிக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
மிக மோசமானத் தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே, சவுதி அரேபியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அந்த நபர் இஸ்லாமியத் தீவிரவாதக் கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், அவரது தனிப்பட்ட விவரங்களிலிருந்து இந்தத் தகவல் தெரியவருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர் ஓமன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தனியாகவே செயல்பட்டிருக்கக்கூடும் என்பதே தங்களின் ஆரம்பகட்ட மதிப்பீடு என இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை விமானி
பொதுவாக இஸ்ரேலுடன் இணக்கமான உறவுகள் ஏதுமற்ற ஓமன் நாட்டில் இருந்து உரிய விசா ஏதுமின்றி ஒருவர் இஸ்ரேலுக்கு பயணப்பட முடியாது என்ற நிலையில், துணை விமானியாக அவர் எவ்வாறு பணியமர்த்தப்பட்டார் என்ற கேள்வியும் எழுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் வழியில் சவுதி அரேபியாவின் மேல் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானம் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 14,000 அடிக்கும் மேல் செங்குத்தாகக் கீழே சரிந்தது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த விமானத்தில் இருந்து வெளியாகியுள்ள காணொளிகளில், சம்பவத்தின் போது ஆக்ஸிஜன் மாஸ்க் எதுவும் வெளிப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என்பது தெரிய வருகிறது.
இருப்பினும், துணை விமானி மற்றும் கேப்டன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தபூக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.