கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற மாட்டோம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்ததுடன், அமெரிக்கா நேட்டோவை 100 சதவீதம் ஆதரிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
யாராலும் தடுக்க முடியாது
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்புகள் ஐரோப்பியத் தலைவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது.

புதன்கிழமை உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில், கிரீன்லாந்து ஏன் அமெரிக்கா வசம் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு நீண்ட வாதத்தை முன்வைத்த நிலையில், ட்ரம்ப் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
நான் அதிகப்படியான பலத்தையும் சக்தியையும் பயன்படுத்த முடிவு செய்யாதவரை அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்காது, அப்படிச் செய்தால், வெளிப்படையாகச் சொல்வதென்றால், எங்களை யாராலும் தடுக்க முடியாது என ட்ரம்ப் முதலில் கூறியிருந்தார்.
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது... ட்ரம்ப் விடுத்த மிரட்டல்
ஆனால், அப்படியான முடிவுக்கு நான் வரவில்லை என குறிப்பிட்டிட்ட ட்ரம்ப், இது நல்ல முடிவு என்று தற்போது அனைவரும் சொல்வார்கள் என்றார். ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பங்குச் சந்தைகள் குதிக்கத் தொடங்கின.
கிரீன்லாந்து மீது ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இருந்தால், அது நேட்டோ அமைப்பையே சிதைக்கக் கூடும். கிரீன்லாந்து விவகாரத்தில் பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் 10 சதவீத வரிகள் விதித்ததும், பங்குச் சந்தைகள் சரிவடையத் தொடங்கின.

இந்த நிலையில் தற்போது Dow and S&P500 குறியீடுகள் தலா 0.7 சதவீதம் உயர்ந்தன, அதே நேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் குறியீடு 0.6 சதவீதம் ஏற்றம் கண்டது.
அமெரிக்கா மட்டுமே
உலகப் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு செல்லும் வரையில் ட்ரம்ப் கிரீன்லாந்து மீதான இராணுவ நடவடிக்கைகளை நிராகரிக்கவில்லை. மட்டுமின்றி, கிரீன்லாந்தை சொந்தமாக்கும் பொருட்டு, நேட்டோ உறுப்பு நாடுகளில் இருந்தும் அமெரிக்கா வெளியேறக்கூடும் என்ற அச்சமும் எழுந்தது.

ஐரோப்பிய நாடுகளை வழக்கம் போல கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், நேட்டோ உறுப்பினராக அமெரிக்கா தொடரும் என்றும் அறிவித்துள்ளார். ஆனால், உறுப்பு நாடுகளுக்கு ஒரு சிக்கல் என்றால், அமெரிக்கா 100 சதவீதம் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவிற்கு ஒரு தேவை என்றால் அவர்கள் ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகமே என்றார்.
கிரீன்லாந்தை விற்பதாக இல்லை என டென்மார்க் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதிகள் அந்தத் தீவைச் சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி செய்து வந்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், கிரீன்லாந்தின் பாதுகாப்புக்கு என டென்மார்க் போதுமான செலவுகளை முன்னெடுப்பதில்லை என விமர்சித்துள்ள ட்ரம்ப், கிரீன்லாந்து தற்போது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.

அமெரிக்கா மட்டுமே தற்போது கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக உள்ளது, டென்மார்க் அல்ல என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கிரீன்லாந்தை மேம்படுத்தி, ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும் வகையிலும், ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பான வகையிலும், அமெரிக்காவிற்கும் நல்லதாக இருக்கும் வகையிலும் இதை உருவாக்குங்கள் என்று ட்ரம்ப் கோரியுள்ளார்.
அதனால்தான், அமெரிக்காவால் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது குறித்து மீண்டும் விவாதிப்பதற்காக, நான் உடனடி பேச்சுவார்த்தைகளை நாடி நிற்கிறேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |