அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி - அதிரடி காட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறை பதவியேற்ற பின்னர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தி, வர்த்தக போர் சூழலை ஏற்படுத்தினார்.
வெளிநாட்டு படங்களுக்கு 100% வரி
தற்போது அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து விலக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன. ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவிற்குள் உள்ள பல பகுதிகள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும், எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும்.
எனவே, வெளிநாட்டு நாடுகளில் தயாரிக்கப்படும் நமது நாட்டிற்குள் வரும் திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன். மீண்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை காண நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்திய படங்களுக்கு பாதிப்பா?
இந்த வரிவிதிப்பு வெளிநாடுகளில் திரைப்படங்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை பாதிக்குமா? அல்லது அமெரிக்க நிறுவனங்களை பாதிக்குமா? என்பது குறித்த விளக்கம் இல்லை.
ஹாலிவுட்டின் பெரும் திரைப்பட நிறுவனங்களான டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் ப்ரோஸ், வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்தி வரும் நிலையில், டிரம்ப்பின் இந்த 100 சதவிகித வரி விதிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்வெலின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே, கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி, அவதார் 4, சூப்பர் கேர்ள் ஆகிய உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படங்களின் மீது வரி விதிக்கப்பட்டால், டிக்கெட் விலை கணிசமாக உயரக்கூடும். மேலும், அமெரிக்காவில் வெளியாகும் இந்திய திரைப்படங்களின் டிக்கெட் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |