இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் பயன்படுத்த தயாராக இருந்தார்கள் - டிரம்ப் பேச்சு
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் பயன்படுத்த தயாராக இருந்ததாக டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனை தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் எல்லையில் மோதலில் ஈடுபட்டன.
4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

நான் தான் இரு நாட்டு தலைவர்களிடம் அழுத்தம் மற்றும் வரி அச்சுறுத்தல்கள் மூலம் மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்தினேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்போது முதல் சுமார் 90 முறை கூறியுள்ளார்.
டிரம்ப் பேச்சு
இந்நிலையில், அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறை பதவியேற்ற ஒரு ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய டிரம்ப், " நான் 10 மாதங்களில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.
8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனது கருத்துப்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருந்தன.
பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்திருந்தார். 'ஜனாதிபதி டிரம்ப் 10 மில்லியன் மக்களைக் காப்பாற்றினார், ஒருவேளை அந்த எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம்' என்று அவர் என்னிடம் கூறினார். இவை இரண்டும் அணு ஆயுத நாடுகள்" என பேசினார்.
ஆனால் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே போரை நிறுத்தியதாக கூறும் இந்தியா, இந்த போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை மறுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |