உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தேவைப்படும் நேரமிது: ஜெலென்ஸ்கியை சாடிய ட்ரம்ப்
Donald trump said ukraine to get a new leader: அமெரிக்காவில் டீசல் விலை உயர்வுக்கு ஜெலென்ஸ்கியே காரணம் என டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவில் டீசல் விலை உயர்வுக்கு காரணம்; அவர் போரினை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புடினுடன் ஒப்பந்தம்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் முயற்சியாக ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்குவதற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் வெள்ளிக்கிழமையன்று டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் செய்தார்.
முன்னதாக, ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஜெலென்ஸ்கியை கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் வலியுறுத்தியும் வந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் டீசல் விலை உயர்வுக்கு ஜெலென்ஸ்கியே காரணம் என்றும், உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தேவை என்றும் கூறினார்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
30 சதவீதப் பகுதியை இழந்துவிட்டார்
மேலும் பேசிய ட்ரம்ப், "ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கக்கூடிய புதிய தலைவரை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்; ஏனெனில் அவரால் பல ஒப்பந்தங்களை செய்திருக்க முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அவர் அதை செய்வதில்லை. 2022-யில் அமெரிக்க ஜனாதிபதியாக நான் இருந்திருந்தால் அந்தப் போர் ஒருபோதும் தொடங்கியிருக்காது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான அந்தப்போர் தொடங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை; திறமையின்மையின் காரணமாகவே அது தொடங்கியது.
ஜெலென்ஸ்கி தனது நாட்டின் 30 சதவீதப் பகுதியை இழந்துவிட்டார்; இரு தரப்பிலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத போர். உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதி தேவைப்படும் நேரம் இது என்று நான் கருதுகிறேன்" என்றார்.
